Milky Mist

Friday, 19 April 2024

தோல்வியிருந்து வெற்றிக்கு: ஹத்தி காப்பி நிறுவனர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்!

19-Apr-2024 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 14 Mar 2017

பெங்களூருவைச் சேர்ந்த வேகமாக வளரும் பில்டர் காபி நிறுவனம் ஹத்தி காப்பி, இதன் நிறுவனரான யு.எஸ். மகேந்தர்(44) வாழ்வில் இளம் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

2009-ல் பசவன்குடியில் 30 சதுர அடிக்கடையில் தினமும் 100 கப் காபி விற்பனையோடு தொடங்கிய ஹத்தி காப்பி இன்று ஆண்டுக்கு 15 கோடி ஈட்டுகிறது. பெங்களூரு, ஹைதராபாத்தில் 46 கடைகள் உள்ளன. அந்த நகர விமான நிலையங்களின் வாசலில் இருக்கும் கடைகளையும் சேர்த்து இந்த கணக்கு. ஒரு நாளைக்கு 40,000 கப்கள் காபி விற்பனை ஆகிறது.

https://www.theweekendleader.com/admin/upload/jan28-17-hatti1.jpg

ஹத்தி காப்பி நிறுவனர் யுஎஸ் மகேந்தர்(இடது) தனது பங்குதாரர் மகாலிங்க கவுடாவுடன், பெங்களூருவில் தங்கள் கடை ஒன்றில் (படம்: விஜய் பாபு)


கல்லூரிப்படிப்பை பாதியில் விட்ட மகேந்தருக்கு தொழில்தொடங்கவேண்டும் என்ற துணிச்சல் இருந்தது. முதல் முயற்சி ஆரம்பத்தில் வெற்றி தந்தாலும் பின்னர் பெரும் இழப்பை அளித்தது. அவர் மன உறுதியுடன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கினார்.

 ஹாசனில் காபி பயிரிடும் குடும்பத்தில் பிறந்த மகேந்தர் அவர் குடும்பத்தில் முதல் தொழிலதிபர். கல்லூரியில் அறிவியல் படிப்பில் இரண்டாம் ஆண்டில் இருந்தபோது படிப்பை விட்டுவிட்டு காபி வர்த்தகத்தில் இறங்கினார். 25 வயதில் அவர் பெரும் பணக்காரர் ஆனார்.

“என்னால் அந்த சூழலைக் கையாள முடியவில்லை. பணம், வெற்றி, புகழ் எல்லாம் ஒன்றாக வந்து என் வாயிற்கதவைத் தட்டின,’’ என்கிறார் அவர்.

ஆனால் இந்த வெற்றி நீடிக்கவில்லை. அறுவடைக்கு சில மாதங்கள் முன்பாகவே காபியின் விலையை நிர்ணயிக்கும் முறையில் ஆபத்து உண்டு. அவர் இந்த ஆபத்தான முறையில் இறங்கி இழப்பைச் சந்தித்தார்.

தோல்வியுற்றாலும் மனம் தளரவில்லை. தன் பங்குதாரர் மகாலிங்க கவுடாவுடன் அவர் ஹாசனை விட்டு 2001-ல் பெங்களூருவுக்கு வந்தார்.

பெங்களூரு இரு கரம் விரித்து அவர்களை ஏற்றுக்கொண்டது. மாதம் 4000 ரூபாயில் பெரிய வீடு அவர்களுக்கு வாடகைக்கு கிடைத்தது. அந்த வீட்டு உரிமையாளர் மும்பைக்கு திடீரென செல்ல வேண்டி இருந்தது. அவர்கள் நம்பிக்கையான ஆளுக்கு வாடகைக்கு விட விரும்பினார்கள். மகேந்தரின் அதிர்ஷ்டம் அவருக்கு இந்த வீடு கிடைத்தது.

“எங்களுக்கு ஒற்றை அறை வாடகைக்குக் கிடைக்குமா என்று தேடினோம். ஆனால் மாளிகையே கிடைத்தது. என் அம்மாவும் விரைவில் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டார்,’’ என்கிறார் மகேந்தர்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  ஸ்வர்ணா புட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற நண்பர் தன்னுடைய காபி வறுக்கும் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். அந்த தொழில் நஷ்டத்தில் அப்போது போய்க்கொண்டிருந்தது.

அவர் மைசூருவுக்கு மாறுதல் ஆகிக்கொண்டிருந்தார். பெங்களூரிவில் இருந்தா டாடா காபி நிறுவனத்துக்காக காபி வறுக்கும் தன்னுடைய 2000 சதுர அடி யூனிட்டை தொடர்ந்து நடத்துமாறு கூறினார். டாடா காபி அதிகாரிகளிடம் அறிமுகமும் செய்துவைத்தார்,’’ நினைவு கூருகிறார் அவர்.

அந்த யூனிட் மீது 3 லட்சம் கடன் இருந்தது. வாடகைப் பாக்கியும் இருந்தது. எல்லாவற்றையும் மகேந்தர் நன்றாக சமாளித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/jan28-17-hatti2.jpg

மகிழ்ச்சியான தொழிலாளர்கள்: ஒவ்வொரு ஹத்தி காப்பி கடையிலும் நான்கு மாற்றுத்திறனாளிகளும் இரண்டு மூத்த குடிமக்களும் பணியில் உள்ளனர்.


 
வாடகைக்கு இடத்தைக் கொடுத்தவர் என் கதையைக் கேட்டுவிட்டு மூன்றுமாதம் அவகாசம் தந்தார்,’’ என்கிறார் மகேந்தர்.

இனி டாடா காபி நிறுவனத்திடம் புதிய ஆர்டர்கள் வாங்குவதுதான் சவால்.  “குமாரா பார்க் மேற்கில் இருந்த அவர்களின் அலுவலகத்துக்கு பலமுறை சென்றேன். ஆனால் சரியாக எதுவும் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் பெரும் போராட்டம். என் அப்பாவின் ஓய்வூதியதொகையை வைத்து இடத்துக்கான வாடகைப் பாக்கியைச் செலுத்தினேன். அம்மாவின் சேமிப்பில் காலம் தள்ளினோம்.’’

டாடா காபியில் சரியாக ஆர்டர்கள் கிடைப்பதற்கு முன்பாக பல அவமானங்களை சந்திக்கவேண்டி இருந்தது.

“டாடா காபி ஆபீஸ் மார்க்கெட்டிங் மேனேஜர் என்னை வெளியே தள்ளுமாறும் உள்ளே விடக்கூடாது என்றும் சொல்லிவிட்டார். தினமும் ஆர்டருக்காக நான் அவரை சந்திக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அவருக்கு பெரும் தொல்லையாக அமைந்துவிட்டது. இந்த சம்பவத்துக்கு அடுத்தநாள் காலையில் 7.45க்கு அவர்கள் அலுவலகம் சென்று வாசலில் நின்றேன். மார்க்கெட்டிங் மேனேஜர் வரும்போது என்னைப் பார்த்தார். சில நிமிடங்கள் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது,’’

பாதாம் மிக்ஸ் பவுடரை வழங்க வாய்ப்பை அவர் கொடுத்தார். ஆனால் ஐந்து வேறு நபர்களும் இதையே வழங்கி இருந்தனர். இவற்றுடன் சேர்த்து மகேந்தர் கொடுத்ததும் பரிசோதனை செய்யப்பட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/jan28-17-hatti3.jpg

மகேந்தர்- மகாலிங்க கௌடா கூட்டணி இந்த காபி நிறுவனத்தை பூஜ்யத்திலிருந்து தொடங்கினர்



“முப்பது பேர் எங்கள் தயாரிப்பை சுவைத்துப்பார்த்தனர். கஷ்டம் வீண்போகவில்லை. எங்கள் தயாரிப்பு அவர்களுக்குப் பிடித்துவிட்டது. 3500 ரூபாய் மதிப்பில் 35 கிலோவுக்கான முதல் ஆர்டர் வந்தது.  மூன்றே நாளில் தயாரித்துக் கொடுக்கவேண்டும். ஒரு ப்ளெண்டரை வாடகைக்குப்பிடித்து வேலையைத் தொடங்கிவிட்டேன். காபி, டீ கலவை தயாரிப்புகளுக்கும் மெதுவாக ஆர்டர்கள் வந்தன. டாடா காபியின் முழு நம்பிக்கையைப் பெற 18 மாதங்கள் பிடித்தன,’’ என்கிறார் மகேந்தர்.

நாடு முழுவதும் உள்ள டாடா காபி எந்திரங்களில் பயன்படுத்தப்படும் காபி, டீ, பாதாம், மால்ட் கலவைகளை மகேந்தர் அதன் பின்னர் அளித்துவருகிறார்.

2008ல் பில்டர் காபி பவுடர் தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்கு சோதனை  முயற்சியாக நகரத்தில் இருந்த முன்னணி ஹோட்டல் நிறுவனத்துக்கு அளித்துப்பார்த்தார்.

"காபி குடித்த வாடிக்கையாளர்கள் நன்றாக இருப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் ஹோட்டல் உரிமையாளர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சுவை பிடிக்கவில்லை என்றார். அவர் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு நன்றி. அவர் எங்கள் காபியையே தொடர்ந்திருந்தால் ஹத்தி காபி உருவாகி இருக்காது,’’ என்கிறார் மகேந்தர். பசவன்குடியில் ஒரு கட்டடத்தின் படிகளுக்குக் கீழ் 30 சதுர அடியில் ஹத்தி காப்பியின் முதல் கடை 1.8 லட்ச ரூபாய் முதலீட்டில் உதயம் ஆனது.

வாடகை 5000 ரூபாய் அல்லது கடையில் விற்பனையாகும் ஒவ்வொரு கப் காப்பிக்கும் ஒரு ரூபாய் இதில் எது அதிகமோ அது தான் வாடகை என்று நிர்ணயிக்கப்பட்டது.

2009, நவம்பர் 27-ல் இந்த கடை தொடங்கப்பட்டது. காலை 4.45 மணிக்கு 5 ரூபாய் விலையில் காபி விற்பனை தொடங்கியது. ஒரு நாளைக்கு 300 கப் விற்றால்தான் சமாளிக்கமுடியும்.

https://www.theweekendleader.com/admin/upload/jan28-17-hatti4.jpg

பெங்களூரு,ஹைதராபாத்தில் உள்ள 46 ஹத்தி காப்பி கடைகளிலும் தினமும் 40,000க்கும் மேற்பட்ட காபி விற்பனை ஆகிறது.


முதல் நாள் 100 காபிகள் விற்றன. மூன்றாவது நாள் முதல் தினமும் 300- 400 காபிகள் விற்பனை ஆயின.காலையில் வாக்கிங் போகும் மூத்த குடிமக்கள் காபியை அருந்தினார்கள். குறை நிறைகளைச் சொன்னார்கள்.

கடையில் ஒரு காபி போடுபவர், ஒரு காசாளர், ஒரு துப்புரவுப் பையன் வேலை பார்த்தனர். மகேந்தரும் இன்னொரு பணியாளரும் மார்க்கெட்டிங்கைக் கவனித்துக்கொண்டனர். கௌடா பொருட்களை வாங்கி அளிக்கும் வேலையைக் கவனித்தார்.

27வது நாள் ஹத்தி காப்பி தினமும் 2,800 காபிகளை விற்றது.  “எங்கள் கடைக்கு முன்னால் நிற்கும் நீண்ட வரிசையைப் பற்றிய ஊடகச் செய்திகள் மேலும் மேலும் கும்பலை வர வைத்தன. ஐந்தே ரூபாயில் எங்கள் காபியை அருந்த மக்கள் வந்தனர்,’’ என்கிறார் மகேந்தர்.

பொறாமை பிடித்த சிலர் கடையில் குழப்பம் விளைவிக்க முயன்றனர். உடனே அருகில் இன்னொரு இடத்தில் ஒரு கடையைத் திறந்த மகேந்தர் விரைவில் மேலும் இரு கடைகளை தியேட்டரிலும் மால் ஒன்றிலும் தொடங்கினார். இரண்டேமாதத்தில் அவர் தான் தொடங்கிய முதல் கடையை மூடிவிட்டார்.

இன்று ஹத்தி காப்பியின் 46 கடைகளில் சில இன்போசிஸ், விப்ரோ. டிசிஎஸ், சிஸ்கோ, டெலாய்ட், மைக்ரோசாப்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் வளாகங்களில் அமைந்துள்ளன.

இந்த கடைகளில் காபியுடன் அக்கிரொட்டி, அக்கி ரோல், புளியோதரை, நுச்சினா உண்டே, ஆர்கானிக்  வெல்ல காபி,  தேன் கலந்த கறுப்பு காபி, பூர்னா ஆர்கானிக் கேக் போன்றவையும் சில இடங்களில் கிடைக்கிறது. பித்தளை மற்றும் மண் குவளைகளில் இவை கிடைக்கின்றன.

இடத்தைப் பொருத்து பில்டர் காபி 9 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் நான்கு மாற்றுத்திறனாளிகளும் இரண்டு மூத்தகுடிமக்களும் பணியில் உள்ளனர். ஆகமொத்த எல்லா கடைகளையும் சேர்த்து 30 மூத்த குடிமக்கள், 30 மாற்றுத்திறனாளிகள் இதில் நால்வர் பார்வைத்திறன் சவால் கொண்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

https://www.theweekendleader.com/admin/upload/jan28-17-hatti5.jpg

இளைஞர்களுக்கு பிரியமான சந்திக்கும் இடங்களாக ஹத்தி காப்பி கடைகள் உள்ளன.


ஹத்தி புட் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தில் மகேந்தர், மகாலிங்க கவுடா இருவருக்கும் சமமான பங்குகள் உள்ளன. நிறுவனத்தை விரிவுபடுத்த 6 கோடிரூபாய் அளவுக்கு இதுவரை வங்கிக் கடன் வாங்கி உள்ளனர்.

தன் அம்மா ரஜனி சுதாகரை தனக்கு தூண்டுகோலாகக் கருதுகிறார் மகேந்தர். இவரது மனைவி சுமிதா. ஒரு மகனும் மகளும் உண்டு.

கன்னடத்தில் ஹத்தி என்ற சொல் கிராமப்புற இல்லத்தைக் குறிக்கும் என்றாலும்கூட நகர்ப்புற பெங்களூரு இளைஞர்களுக்கு இதுவொரு பிரியத்துக்குரிய சந்திப்பு இடமாக மாறிவிட்டது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • This businessman sold vada pav and repaid Rs 55 lakh debt

    சுவையான வெற்றி

    மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை

  • Success through low price

    குறைந்த விலையில் நிறைந்த லாபம்!

    ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.

  • How a grocer's son started a biscuit factory and became a crorepati

    பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!

    அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்

  • Kngs of good tea

    தேநீர் மன்னர்கள்!

    பாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை

  • plates from agriculture waste is multi crore business

    இனிக்கும் இயற்கை!

    உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Man who was booking bus tickets is now owner of a bus company

    வெற்றிப்பயணம்

    ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்