Milky Mist

Friday, 29 March 2024

பேனா தயாரிப்பில் ஒரு சாமானியர்  கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை

29-Mar-2024 By ஜி.சிங்
கொல்கத்தா

Posted 17 Mar 2017

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக வெறுங்கையுடன் கொல்கத்தா வந்த ஒரு  மனிதர் இன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய பேனா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இந்நிறுவனத்தின் வர்த்தகம் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய்கள். இன்று நாற்பதாவது ஆண்டைக் கொண்டாடும் இந்நிறுவனம் 50 நாடுகளுக்கு பேனா அனுப்புகிறது,  ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் பேனாக்கள் உற்பத்தி செய்கிறது, இந்நிறுவனத்தை உருவாக்கியவர் சுராஜ்மல் ஜலான். இப்போது அவருக்கு வயது 78.

 கொல்கத்தாவில் ஒரு வாடகைக்கடையில் பேனா விற்ற சுராஜ்மல் ஜலான் பின்னர்  சொந்தமாக பேனா தயாரிக்க ஆரம்பித்தார் (படங்கள்: சிறப்பு ஏற்பாடு))


ராஜஸ்தானில் உள்ள லச்மான் கார் என்ற கிராமத்தில் 1938-ல் பிறந்த சுராஜ்மலின் குடும்பம் ஏழ்மையானது. அவரது தந்தை ஓய்வுபெற்றதால் சுராஜின் அண்ணன்கள் வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஆறு குழந்தைகள் நிறைந்த குடும்பத்தில் சுராஜ் ஐந்தாவது குழந்தை.

“குடும்பம் ஏழ்மையில் இருந்தாலும் என் அண்ணன்கள் என்னை வேலைக்கு அனுப்ப விரும்பவில்லை. நான் படிப்பதையே விரும்பினார்கள்,’’ என்கிறார் சுராஜ்.

பள்ளிப்படிப்பை முடித்தபின் 18 கிமீ தூரத்தில் இருந்த ஒரு கல்லூரியில் படிக்கச் சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் படித்தார். கல்லூரிக்குப் போய்வரும் செலவைக் கூட வீட்டினரால் ஏற்கச் சிரமப்படும் அளவுக்கு வறுமை இருந்தது. அதனால் பக்கத்தில் எங்காவது  படிக்கக்கூடாதா என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சுராஜ் சேர்ந்த கல்லூரி சிறப்பானது. அங்கேயே படிக்க விரும்பினார் சுராஜ்.

1957-ல் தன் 19 வயதில் சுராஜ், தன் வாழ்க்கை தன் கையில் என உணர்ந்தார். கொல்கத்தாவில் அவர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் மூலம் அங்கு இருந்த வேலை வாய்ப்புகளை அறிந்துகொண்டார். முதலில் அங்கு செல்ல குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. அப்புறம் முதலில் திருமணம் செய்துகொள் பின்னர் போகலாம் என்றனர். ஆனால் சுராஜ் விடாப்பிடியாகக் கிளம்பிவிட்டார். ரயிலில் டிக்கெட் வாங்க மட்டும் காசு இருந்தது, வழியில் சாப்பிட வீட்டில் செய்துகொடுத்த சாப்பாடு. அவ்வளவுதான்! ரயில் கிளம்பிவிட்டது!

கொல்கத்தா வந்ததும் அங்கு ஒரு கார்ப்பெட் ஷோரூமில் 60 ரூ சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  "விற்பனை, கணக்கு எழுதுதல், பொதுவான வேலைகள் எனக்குத் தரப்பட்டன. நண்பர் ஒருவரின் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் தங்கிக்கொண்டேன். சாலையோரத்தில் குளியல், சின்ன கடைகளில் சாப்பாடு.

மகன்கள் தீபக் ஜலான் (இடது ஓரம்), அலோக்ஜலான் (இடமிருந்து மூன்றாவது), பேரன் ரோஹித் ஜலான் ஆகியோருடன் சுராஜ் ஜலான்.


கையில் காசு இல்லையென்பதால் தினமும் பல கிமீ நடந்தே வேலைக்குச் செல்வேன். அந்த நாட்கள் மிகவும் கடினமானவை. குடும்பத்தை நினைத்துக் கண்ணீர்விடுவேன்,’’ என்று நினைவுகூர்கிறார் சுராஜ்.

இங்கு ஓர் ஆண்டு வேலை பார்த்த பின் சீப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அதன் பிறகு திருமணம் ஆகியது. பின்னர் சிலிகுரியில் ஒரு நிறுவனத்தில் துணை மேலாளராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

"இந்த சமயத்தில் ஊரில் அப்பா அம்மாவுக்கு வயதாகிவிட்டது என்பதால் ஊருக்கே திரும்புமாறு அழுத்தம் கொடுத்தார்கள். எனவே திரும்பிச் சென்றுவிட்டேன்,’’ என்கிறார் சுராஜ்.

ஊரில் இருந்தபோது ஐயாயிரம் ரூபாய்க்கு பேனாக்கள் வாங்கி வீட்டுக்கு வீடு போய் விற்கும் தொழிலைச் செய்தார். நாட்டில் தரமான பேனா தயாரிக்கும் நிறுவனமே இல்லை என்கிற உண்மை அவருக்கு அப்போது தெரிந்தது.

லிங்ல் பென்ஸ் நிறுவன எம் டி. தீபக் ஜலான்.  இவர் 1980-ல் விற்பனையாளராகச் சேர்ந்தார். இவரது தலைமையில் நிறைய பொருட்கள் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டன. படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)



விரைவிலேயே ஊரில் இருந்தால் வேலைக்கு ஆகாது என புரிந்துபோனது. இரண்டு ஆண்டு கழித்து கொல்கத்தாவுக்கே வந்தார்.

"பாக்ரீ மார்க்கெட்டில் சின்ன பேனா கடை ஒன்றைத் தொடங்கினேன். அதை மொத்தவிற்பனைக் கடையாக மெல்ல மாற்றினேன். ஆனால் பேனா தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கவே ஆர்வம் இருந்தது,” என்று சொல்கிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த அவரது மனைவிவீட்டுக்காரர்கள் உதவிக்கு வந்தார்கள். வடக்கு கொல்கத்தாவில் பத்துக்கு பத்து அடி அறை ஒன்று அவர்களுக்கு இருந்தது. அதில் பேனா பேக்டரி தொடங்க அனுமதித்தார்கள். "பத்தாயிரம் ரூபாய் போட்டு பால் பேனா செய்யத் தேவையான ப்ளாஸ்டிக் பாகங்கள் செய்யத் தொடங்கினேன். என் தயாரிப்புகள் பிரபலம் ஆயின. ஆனால் சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்க விரும்பினேன்,’’ என்கிற சுராஜ் 1976-ல் லிங்க் பென் அண் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனத்தை 700 சதுர அடி வாடகை இடத்தில் 3 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். ஐந்து பேர் வேலை செய்தனர். மாத வாடகை 700 ரூபாய்.

“லிங்க் என்றால் தொடர்புகொள்ளுதல் என்ற ஆங்கில வார்த்தை,  நண்பர் ஒருவர் சொன்னது. அதிலிருந்துதான் பெயர் வைத்தோம்,” என்கிறார் சுராஜ்.

பேனாக்கள் மட்டுமல்ல, மார்க்கர்கள், நோட்டுகள், பைல்கள் ஆகியவற்றையும் லிங்க் தயாரிக்கிறது


பேனாக்களை வெளியே செய்யக்கொடுத்தோம். கடைகளுக்குச் சென்று கடைக்காரர்களை எங்கள் பொருட்களை வாங்க சம்மதிக்க வைத்தேன். வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தையும் கேட்டேன்.”

தொழில் வளர்ந்தது. 1.5 கோடி அளவுக்கு விற்பனை இருந்தபோது அவரது 17 வயதான மகன் தீபக் ஜலான் 1980ல் நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார்.

இப்போது எம்டியாக இருக்கும் தீபக், “பேனாக்கள் இன்னும் விலை மலிவானவையாகக் கருதப்படுகின்றன, நான் பேனாக்கள் தாண்டி மேலும் சில பொருட்களைத் தயாரிக்க முடிவெடுத்தேன்.’’

சர்வதேச அளவில் தங்கள் பேனாவைக் கொண்டுபோக விரும்பியதால் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் முதல் தயாரிப்பு வசதியை 1986-ல் உருவாக்கினார்கள்.

1992-ல் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு யுனி பால் பேனாக்களின் பிரத்யேக விநியோகஸ்தர்கள் ஆனார்கள். அதே ஆண்டு தென் கொரியாவுக்கு 12 லட்சரூபாய் மதிப்பில் பேனாக்கள்  முதன்முதலில் ஏற்றுமதி செய்தார்கள்.

1995ல் இவர்களின் ஆண்டு விற்பனை 25 கோடி ஆனது. மும்பை, கொல்கத்தா பங்குச்சந்தையிலும் நிறுவனம் பதிவு ஆனது. 2000-2001 நிதியாண்டில் விற்பனை 52 கோடியாக அதிகரித்தது.  2005-ல் லிங்க் கிளைசரை அறிமுகம் செய்தனர். லிங்க் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சில்லரை விற்பனைக் கடைகளும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் விற்பனையை இரண்டுமடங்கு ஆக்க திட்டம் வைத்திருக்கிறார் தீபக்.


இப்போது கிழக்கு இந்தியா, மும்பை பகுதிகளில் லிங்க் 13 சில்லரைக் கடைகளை வைத்து இருக்கிறது. ஜெல் பேனாக்கள், பால்பேனாக்கள், பௌண்டைன் பேனாக்கள், மார்க்கர்கள், பைல்கள் உள்ளிட்ட 50 சொந்தமாக தயாரிக்கும் பொருட்களை இங்கு விற்கிறார்கள்.

2008-ல் லிங்க் ஷாருக் கானை தங்கள் பிராண்ட் தூதராக நியமனம் செய்தனர்.

15  கோடி முதலீட்டில் 33,000 சதுர அடியில் தங்கள் இரண்டாவது தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்கினார்கள். தீபக் தன் மகன் ரோஹித் உடன் இணைந்து நிறுவனத்தின் விற்பனையை அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்க திட்டம் தீட்டுகிறார்.

சுராஜ் ஜலான் தன்  பெயரை இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவங்களின் வரிசையில் எழுதி உள்ளார். அவரது அடுத்த தலைமுறை இந்த வெற்றிக்கதையைத்  தொடர்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

    சிறகு விரித்தவர்!

    அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்

  • Success Story of Detox Juice maker

    இளமையில் புதுமை

    சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

  • Romance and Business

    ஆதலால் காதல் செய்வீர்!

    இளம்வயதில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி, இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் வகையிலான சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களை வெற்றிகரமாக கட்டமைத்துள்ளனர். அவர்கள் செய்த முதலீடு எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Rags to riches in Kolkatta

    நிஜ ஹீரோ

    கொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை

  • Man who sold milk on a bicycle owns Rs 300 crore turnover company

    பாலில் கொட்டும் பணம்!

    மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.

  • Success story of  a Raymond Franchisee

    ஒரு முகமையின் வெற்றிக்கதை

    வழக்கறிஞரின் மகனாக இருந்த சைலேந்த்ரா, தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற கனவுடன் 50 ஆயிரம்ரூபாய் முதலீட்டில் டெக்ஸ்டைல் ஷோரூம் தொடங்கினார். இன்றைக்கு ரேமண்ட் பிராண்டின் முகவராக ஆண்டுக்கு 22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை