Milky Mist

Friday, 19 April 2024

46,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய நிறுவனம், 20 கோடி ரூபாய் கட்டுமானத் திட்டங்களை செய்து முடித்திருக்கிறது!

19-Apr-2024 By உஷா பிரசாத்
பெங்களூரு

Posted 09 Sep 2019

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, சரத் சோமன்னா 2013-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு கட்டட ஒப்பந்தத்தைப் பெற்றார்.  முடிக்கப்படாமல் பாதியில் கைவிடப்பட்ட ஒரு கட்டட உரிமையாளரைத் தொடர்பு கொண்டு இந்த ஒப்பந்தத்தை அவர் பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து திறன்வாய்ந்த கட்டுமானத் தொழிலதிபராகவும்  இண்டீரியர் வடிவமைப்பாளராகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார். அவரது நிறுவனம் கடந்த ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்களை செய்து முடித்திருக்கிறது.

வெறுமனே கட்டட கட்டுமான ஒப்பந்தப் பணிகள் மட்டுமின்றி, வடிவமைப்பு முதல் அனைத்து வகையான கட்டடப் பணிகளையும் மேற்கொள்ளும் திட்டங்களில் (turn-key project) அவர் கவனம் செலுத்துகிறார்.   ப்ளூ ஓக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் &இன்டீரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Blue Oak Constructions & Interiors Pvt Ltd) நிறுவனத்தை 46,000 ரூபாய் முதலீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினார். விரைவில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தம் நிறுவனத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/27-07-19-05som.jpg

பி.பி.ஏ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, சரத் சோமன்னா முதலாவது கட்டட கட்டுமான திட்டத்துக்கு ஒப்பந்தம் பெற்றார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

 

“வாடிக்கையாளர்கள் இப்போது, தனியாக ஒரு வடிவமைப்பாளர், ஒரு ஒப்பந்ததாரர் என விரும்புவதில்லை. எனவே, நாங்கள் அனைத்தையும் கொண்ட ஒரே தீர்வாக கொடுக்க முயற்சி செய்கிறோம், “ என்கிறார் 27 வயதான சோமன்னா. “ஒப்பந்தப் பணிகள் பின்னணியில் இருந்து வந்ததன் விளைவாக, எங்கள் நிறுவனத்தில் நல்ல வடிவமைப்பாளர்கள் குழு உள்ளது. எனவே, சிறப்பாகச் செயலாற்றுகின்றோம். வடிவமைப்புக்காக நாங்கள் கட்டணம் பெறுவதில்லை.”

பொறியியலில் அல்லது வடிவமைப்பில் இவருக்கு போதுமான பயிற்சி இல்லையெனிலும் குடியிருப்பு கட்டடங்கள் முதல் வணிக கட்டடங்கள், தவிர பெருநிறுவன அலுவலகங்கள் முதல் தொழிலக கட்டடங்கள் வரை பெரிய கட்டுமானத் திட்டங்களை இவர் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால்  குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மகனான இவருக்கு எளிதான பயணமாக இது இருக்கவில்லை.

பெங்களூரு நகரில் கட்டுமானத்துறையின் உச்சத்தை தொடுவதற்கு முன்பு , சோமன்னா கடினமான சூழல்களைச் சந்தித்தார். 2014-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கிய பின்னர் முதலாம் ஆண்டில் 55 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தார்.

“மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். ஒருபோதும் தளர மாட்டேன் என்ற என்னுடைய உந்துதல் சவால்களை சந்திக்கும் வகையில் எனக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்தது,” என்கிறார் ஆரம்ப கட்ட பின்னடைவுகள் பற்றி சோமன்னா.

நிறுவனத்தைத்  தொடங்கியதும் அவர், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கட்டுமானத் திட்டங்களை எடுத்துச் செய்தார். “திட்டங்களை பெறுவது எளிதாக இருந்தது,” என்று நினைவு கூறும் அவர், “நான் ஒரு தொழில் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதால், ஆலோசனை மற்றும் அறிவுரை பெறுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தேன். எனவே, நான் பல தவறுகளை மேற்கொண்டேன். என் முதல் கட்டுமானத் திட்டத்தின்போது மேற்கொண்ட தொழில் உத்தியை பின்னர் வந்த திட்டங்களுக்கும் உபயோகித்தேன். ஆனால், இந்த உத்தி பின்னர் வந்த திட்டங்களுக்குச் சரியானதாக இல்லை என்பதை உணர்ந்தேன்.”

பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமைய்யா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.பி.ஏ படித்துக் கொண்டிருந்தபோது முதல் கட்டுமானத் திட்டம் அவருக்குக் கிடைத்தது. “ஒரு நாள் நான் கல்லூரியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். குடியிருப்பு ஒன்று முழுமையடையாமல் பாதியில் நின்றிருந்தது. ஏன் இந்தக் கட்டுமானப்பணி பாதியில் நின்றது என்று கவலைப்பட்டேன். அந்த கட்டடத்தின் உரிமையாளரை அணுகினேன். அந்த கட்டடத்தின் கட்டுமானப்பணியை பெற்றேன்,” என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/27-07-19-05som2.jpeg

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தும் அறிவுப்பூர்வமான வல்லுநர்களைக் கொண்ட குழு தம்மை சூழ்ந்திருப்பதாக சோமன்னா கூறுகிறார்.

 

சோமன்னா, 51 வயதான ஓர் அனுபவமிக்க பொறியாளரை  உடன் அழைத்துச் சென்றார். அவரிடம், இந்த ஒப்பந்தம் கிடைத்தால், உங்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றேன் என்று சொன்னார். இதன் மூலம் அவர் தன் முதல் கட்டுமானத் திட்டத்தைப் பெற்றார்.

கட்டடத்தின் உரிமையாளர் எங்களுக்கு ரூ.4 லட்சம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்தார். ரூ.1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத் திட்டத்தை எடுத்து, 46,000 ச.அடி கட்டடத்தை ஒரு ஆண்டில் முடித்தோம்,” என்கிறார் அவர்.

 ”ஆனால், அடுத்த திட்டம் பிரச்னையில் சிக்கியது. அந்தக் கட்டுமானத் திட்டம் மிகவும் பெரியது. ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நிர்வாகத்திறமை எங்களிடம் இல்லை. அந்த கட்டடத்தினை முன்னெடுத்தவர்கள் எங்களுக்கு சரியான நேரத்தில் பணம் தரவில்லை. முதல் ஆண்டில் எங்கள் நிறுவனம் 55 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் அடைந்தது.”

எனினும், ஒரு தீவிர போராளி என்ற வகையில், சோமன்னா இதில் பாடம் கற்றுக்கொண்டார். “இது எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது. அதனை நான் விரும்பினேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.  

தமது குழுவை மீண்டும் அவர் கட்டமைத்தார். நல்ல புத்திசாலியான நபர்களை வேலைக்கு எடுத்தார். தொழில்முறையைப் புதுப்பித்தார். “பெரும் மன அழுத்தத்தை சந்தித்தாலும், கடின உழைப்பை மேற்கொள்வதற்கான சக்தியாகவும், ஊக்கமாகவும் அது இருந்தது. இழப்பு ஏற்பட்டபோதிலும், எதுவும் என்னை கீழே சாய்த்து விடவில்லை. பெரும் ஏமாற்றங்களைப் பார்த்தேன். பொறியாளர்கள் ஏமாற்றினர்.  ஆனால், நான் தளரவில்லை. ஒருபோதும் தளரமாட்டேன்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

“என்னுடைய பணியாளர்களுக்கு நான் உரிய நேரத்தில் சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டபோது, எந்த நேரத்திலும் நான் மிகவும் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்  ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சம்பளம் கொடுப்பதற்கு போதுமான பணம் எப்போதும் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.  இன்றைக்கு நான் அந்த இலக்கை அடைந்து விட்டேன் என்று பெருமையுடன் சொல்லமுடியும்.”

ஊழியர்கள் , நிதி நிலைமை ஆகியவற்றை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளும்போது சோமன்னாவுக்கு வெறும் 22 வயதுதான் ஆகியிருந்தது.  

https://www.theweekendleader.com/admin/upload/27-07-19-05som1.jpg

கல்லூரி நாட்களின் போது தேசிய அளவிலான ஹாக்கி வீரராக இருந்த  சோமன்னா, இப்போது நேரம் கிடைக்கும்போது கோல்ஃப் விளையாடுகிறார்.

 

இழப்பில் இருந்து எப்படி அவர் மீண்டெழுந்தார்? "நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததன் காரணமாக என் குடும்பத்தினர் பணரீதியாக எனக்கு ஆதரவு தர இயலவில்லை. ஆனால், உணர்வு ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பெரும் ஆதரவு கொடுத்தனர். வாய்ப்புகளுக்காக நான் காத்திருந்தேன். என்னுடைய இழப்பை ஈடுகட்டும் வகையில் சில நல்ல கட்டுமானத் திட்டங்களைப் பெற்றேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.

ப்ளூ ஓக் 2016-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமான பல கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதற்கு வெளியில் இருந்து எந்த முதலீட்டையும் ஒருபோதும் பெறவில்லை. கட்டுமான திட்டங்களில் மைசூருவில்  3.5 லட்சம் ச.அடி ஃப்ளாட்கள், உயர் ரக குடியிருப்புகள், பெருநிறுவன அலுவலகங்கள், தொழிலகக் கட்டுமானத் திட்டங்கள் ஆகியவை அடக்கம். கோவாவில் இந்த ஆண்டு ஒரு ரிசார்ட் கட்டுமானத்திட்டத்தை பெறுவதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கின்றனர்.

“இந்த ஆண்டில் இருந்து வடிவமைப்பு கட்டுமானத் தீர்வில் மேலும் அதிக கவனம் செலுத்துகின்றோம். கட்டடவடிவமைப்பு கருத்துருவாக்கம் முதல் இண்டீரியர் மற்றும் கட்டுமானப்பணியை முடித்தல் என முழுமையாக கட்டுமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்,” என்று எதிர்கால திட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ப்ளூ ஓக் 11 அலுவலக ஊழியர்கள், கட்டுமான இடங்களில் பணியாற்றும் 60 ஊழியர்கள் ஆகியோருடன் தொடங்கப்பட்டதுஇப்போது 18 அலுவலக ஊழியர்கள் மற்றும் கட்டுமானத்திட்டங்களில் 150 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அனுபவம் வாய்ந்த ஜே.எல்.எல், குஷ்மேன் & வேக்ஃபீல்ட் மற்றும் சில அமெரிக்க நிறுவனங்களிலிருந்து திறன் வாய்ந்தவர்கள் இணைந்திருப்பதால், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் குழு  வளமான திறமையானவர்களைக் கொண்ட குழுவாகத் தனித்து நிற்கிறது.

முன் அனுபவம் இல்லாத நிலையில் எப்படி வணிகத்தின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டார் என்று கேட்டபோது, அவர் புன்னகையுடன் கூறுகிறார். “ஒரு தொழில் அதிபராக, நிறுவனத்தின் சில நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு மண்டையை குழப்பிக் கொள்வதை விடவும், எப்போதும் புத்திசாலியான நபர்கள் சூழ இருப்பது நல்லது.”

சோமன்னா, கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் மடிக்கேரியில் பிறந்து வளர்ந்தவர். அங்கே அவர் 10ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த அவர், புனித ஜோசப் இந்தியன் உயர் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தார். அவரது பெற்றோர் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்த பின்னர் அவரும் அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார்.

https://www.theweekendleader.com/admin/upload/27-07-19-05som4.jpg

ப்ளூ ஓக்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் & இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் படைப்பு


அவருடைய தந்தை கணேஷ் அபாய்யா, ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீ ரர். அவரது தாய் சீத்தாம்மா கணேஷ்  ஒரு குடும்பத் தலைவி. தந்தையைப் பின் தொடர்ந்து அவர் ஒரு ஹாக்கி வீரரானார். சோமன்னா  பள்ளியில் படிக்கும்போது, கர்நாடகா மாநிலத்தின் சார்பில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் கூட விளையாடி இருக்கிறார். இப்போது நேரம் கிடைக்கும்போது கோல்ஃப் விளையாடுகிறார்.

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் ஒரு விளையாட்டு வீரருக்கு உரிய ஒழுக்கத்துடன் உள்ளார். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்றுகிறார். தினமும் பணியைத் தொடங்குவதற்கு முன்பு 40 நிமிடங்கள் தியானம் செய்கிறார். இவர் நாய்களை நேசிப்பவரும் கூட. "எனது இரண்டு கோல்டன் ரெட்ரீவர்ஸ் மற்றும் ஒரு காக்கர் ஸ்பானியல் ஆகிய செல்லப் பிராணிகள்  மன அழுத்தங்களை குறைப்பதற்கு உதவுகின்றன," என்கிறார் அவர்.

ப்ளு ஓக் என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்டோம். "ப்ளூ என்பது நிறம். அது தெளிவானதை விளக்குகிறது. ஓக் என்பது வலுவான ஒரு மர வகை. இது கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எங்களுடைய லோகோவில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. தெளிவான உண்மையானவற்றுடன் வலுவான கட்டுமானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியாகத் தருகின்றோம். கட்டுமானத்துறையில் இதுதான் இப்போது போதாமையாக இருக்கிறது என்று நான் கருதுகின்றேன்," தெளிவான பார்வையுடன் சொல்கிறார்.

பெங்களூரின் மேல்தட்டு வட்டாரத்தில், ஓர் அரண்மனை போன்ற இரண்டு மாடி வீட்டில் நடந்த இந்த கட்டுரையாளருடனான சந்திப்பில் அவர் சொல்வதற்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்பது தெளிவாகிறது. அந்த வீட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் ப்ளு ஓக் நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன.

பணியை மிகவும் உன்னிப்பாக கவனிக்கிறார் சோமன்னா.  பழைய மர வேலைப்பாடுகளை அப்படியே தக்கவைப்பது  என்று  தீர்மானிக்கிறார். வீட்டு உரிமையாளரின் ரசனைக்கு ஏற்ப, சமையலறை, குளியலறைகளை அழகாக மறுவடிவமைப்பு  செய்யத் திட்டமிடுகிறார்.

 

https://www.theweekendleader.com/admin/upload/27-07-19-05som3.jpeg

சோமன்னா தமது பெற்றோர் மற்றும் செல்ல நாய்களுடன் ஓய்வு நேரத்தில்...

 

"இது போன்ற நுட்பமான, அழகான வேலைப்பாடு கொண்ட பூஜை அறையின் மர கதவை மாற்றுவதற்கு  எனக்கு மனது இல்லை.  இந்த வீட்டினை மறுவடிவமைப்புச் செய்வதற்கு எங்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பராம்பர்யம் மற்றும் நவீனமும் கொண்ட சிறப்பான கலவையை அளிக்கும் வகையில் சில பழங்கால வடிவமைப்புகளை தக்கவைத்துக்கொள்ளும்படி வீட்டின் உரிமையாளரை சமாதானப்படுத்தினேன்," என்று அவர் விவரிக்கிறார்.

சோமன்னா தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். "இளம் வயதில் இருந்தே சில தொழில்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். பள்ளியில் படிக்கும்போது பப்பிள்கம் டாட்டூ விற்பனையில் ஈடுபட்டேன்.  ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டு கொண்டிருந்தேன்," என்று நினைவுகூர்ந்து சிரிக்கிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Gym and Money

    தசைவலிமையில் பண வலிமை!

    உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம் பயிற்சிக்கு சென்றார் அந்த இளைஞர். அங்கே ஓர் அற்புதமான தொழில் வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு 2.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் சங்கிலித் தொடர் உடற்பயிற்சி நிறுவனங்களை வெற்றி கரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Selling popcorn and minting money

    மொறுமொறு வெற்றி!

    சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Former car washer is owner of Rs 20 crore turnover company today

    கார் கழுவியவர், இன்று கோடீஸ்வரர்

    ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கார் கழுவும் வேலையில் தொடங்கி, இப்போது குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. 20 கோடி வர்த்தகத்துடன் நாட்டின் முதல் 20 ஆர்.ஓ தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இவரது நிறுவனம். எஸ்.சாய்நாத் எழுதும் கட்டுரை

  • Virudhachalam to Virginia

    விருத்தாசலம் டூ வர்ஜீனியா!

    தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Success story of a Wireman

    ஒரு வயர்மேனின் வெற்றிக்கதை

    வேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • Success story of  a Saree seller

    சேலைகள் தந்த கோடிகள்

    கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை