Milky Mist

Tuesday, 19 March 2024

உடலே உன்னை ஆராதிக்கிறேன்!- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்!

19-Mar-2024 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 15 Jun 2019

2017-ம் ஆண்டு தீக்‌ஷா சாப்ராவின் தலையில் திருமதி. இந்தியா எர்த் பட்டத்துக்கான முடிசூட்டப்பட்டது. தீக்‌ஷாவின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது.  சொன்னால் நம்பமாட்டீர்கள்! இந்த அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெண்ணின் எடை 90 கிலோ! குண்டான உடலைப் போராடிக் குறைத்தவர் இவர். இந்த அனுபவத்தையே முதலீடாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான தொழில் நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

தீக்‌ஷா சாப்ரா மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஒரு நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது பிட்னெஸ் செண்டர் நடத்துகிறார். கட்டுடலைப் பேணுவது எப்படி என்ற ஆலோசகராக மாறி இருக்கிறார். 300-க்கும் மேற்பட்டோர் இவர் ஆலோசனையின் பேரில் இளைத்துக் கட்டுடலைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டு 15 லட்சம் ரூபாயை ஈட்டியிருக்கிறார். தொழில்நுட்பத்தைக் கொண்டு, குறிப்பாக சமூக வலைத்தளங்களைக் கொண்டு இந்த வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.

 

https://www.theweekendleader.com/admin/upload/11-05-19-03fit1.JPG

எடைகுறைப்பு ஆலோசனை தொழில் முனைவோரான தீக்‌ஷா சாப்ரா, 300 பேருக்கு மேல் எடையை குறைத்து கட்டுடல் பெற உதவி இருக்கிறார். (புகைப்படங்கள்: விநாயக் பரத்வாஜ்)


33 வயதான இந்தப் பெண்ணுக்கு உண்மையாகவே இது பெரிய சாதனை! உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், 2014-ம் ஆண்டு , பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவரது உடல் எடையானது 78 கிலோவில் இருந்து மளமளவென அதிகரித்து 90 கிலோ ஆனது. ஆனால், தன் மன உறுதிகாரணமாக, தாம் இழந்ததை விடவும் விரைவாக தம் கட்டுடலை திரும்பப் பெற்றார்.

ஜபல்பூரில் அவருடைய தாய் பள்ளி ஒன்றின் ஆசிரியை. அவருடைய தந்தை மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். “என் தாய்தான் எப்போதுமே எனக்கு முன்னுதாரணமாக இருந்தார்,” என்று நினைவு கூறுகிறார் அவர்.

“நான் ஸ்கவுட் மற்றும் கைட் மற்றும் என்.சி.சி ஆகியவற்றிலும், நாடகங்களில் நடிப்பதிலும் பங்கேற்றேன். கேந்திர வித்யாலாவில் என்னுடைய பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன். செயின்ட் அலோசியஸில் பி.எஸ்.சி படித்தேன். பின்னர் ஐதராபாத்தில் உள்ள ஐசிஎஃப்ஐஏ-வில் எம்.பி.ஏ மனித வளத்துறை படிக்கச் சென்றேன். 2008 பட்ட மேற்படிப்பு முடித்த உடன், புனேவில் உள்ள எசிலர்க் என்ற பி.பி.ஓ-வில் பணியாற்றினேன். மனித வளத்துறை பிரிவில், ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றேன். “

இப்படித்தான் சாப்ராவின் ஆரம்பகட்ட வாழ்க்கை, இந்திய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமான நடைமுறைகளைக் கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டு உடல் எடையைக் குறைப்பதற்காக தம் உடலுடன் போராடத் தீர்மானித்ததன் விளைவாக ஒரு சூப்பர் பெண்மணியாக அவர் மாறினார்.

 

https://www.theweekendleader.com/admin/upload/11-05-19-03fit.jpg

தீக்‌ஷாவின் முந்தைய புகைப்படமும், பின்னர் எடுத்த புகைப்படமும், அவரது கட்டுடலைப் பேணும் பயணத்தின் உதாரணங்களாக இருக்கின்றன.


“2016-ம் ஆண்டு முழு மூச்சுடன் உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். எனவே, கட்டுடலைப் பெற்றேன். எனது உடல் எடை 61 கிலோவாக குறைந்தது. 2017-ம் ஆண்டு நான் திருமதி இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்றேன். திருமதி இந்தியா எர்த் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றேன். தவிர, கட்டுடல் பிரிவில் முதலிடம் பிடித்தேன்.” எனும் சாப்ரா, வெற்றிகரமான தமது கட்டுடலை தக்கவைத்துக் கொண்டதன் பயணத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

“என்னுடைய கட்டுடல் பயிற்சி அனுபவப் பயணத்தை என்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதைப் பார்த்து விட்டு, மக்கள் என்னைப் பின்தொடர ஆரம்பித்தனர். உடல் எடையைக் குறைப்பதற்கு அறிவுரை வழங்கும்படி கேட்டனர். திருமதி.இந்தியா பட்டம், தீக்‌ஷா சாப்ரா ஃபிட்னஸ் கன்சல்டண்சி என்ற என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்தது. “

இது தவிர அவர், நுண்ணூட்ட சத்து மற்றும் உடற்பயிற்சியாளர் பயிற்சி எனும் சான்றிதழ் பயிற்சிகளில் சேர்ந்தார். 2018-ம் ஆண்டு ஜனவரியில் அவரது இணையதளத்தைத் தொடங்கினார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அவருடன் இணைந்தனர்.

“இந்த இணையதளத்தைத் தொடங்குவதற்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தேன். நிரந்தர ஊழியர்களை நியமிக்க விரும்பவில்லை என்பதால், ஃப்ரீலேன்ஸ் குழுவை வைத்து அதனை உருவாக்கினேன். இந்த முறை, உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் எனக்கு ஏற்ற நேரத்தில் பணியாற்ற உதவுகிறது,” என்று தமது நிறுவனத்தைப் பற்றி விவரிக்கிறார் சாப்ரா.

2009-ம் ஆண்டு டிசம்பரில் ராணுவ கர்னல் மனு சர்மா உடன் அவருக்குத் திருமணம் நடந்தது. பின்னர் ஜாக்ரே என்ற மகன் பிறந்தான். திருமணத்தால்தான் சாப்ராவின் வாழ்வில் திருப்புமுனை வந்தது. “என் கணவருக்கு வடகிழக்கு மாநிலத்தில் போஸ்டிங் போட்டிருந்தனர். எனவே என்னுடைய வேலையை விட்டு விட்டு, அவருடன் சென்றேன்,” என்கிறார் சாப்ரா.

https://www.theweekendleader.com/admin/upload/11-05-19-03fit2.JPG

2017ம் ஆண்டு திருமதி இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்றபோது, தீக்‌ஷாவின் உடல் எடை 61 கிலோவாக இருந்தது.


“2010-ம் ஆண்டு எனக்கு மகன் பிறந்தான். அப்போது என்னுடைய நேரம் முழுவதையும் அவனுக்கே செலவழித்தேன். என் கணவர் ராஜஸ்தானில் பணி புரிந்தபோது, ராணுவப் பள்ளி ஒன்றில் நான் ஆசிரியையாகப் பணியாற்றினேன். அடுத்ததாக அவர் டெல்லிக்கு பணிமாற்றப்பட்டார். அப்போது தெற்கு டெல்லியில் உள்ள மேப்பில் பியர் என்ற சர்வதேச ப்ரீ ஸ்கூலில் 2014-ம் ஆண்டு நிர்வாகப் பணியில் பணியாற்றினேன். அங்கே நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன். வாழ்க்கை வழக்கம்போல சுழன்று கொண்டிருக்கிறது என்று நான் கருதியபோது, எங்கள் வாழ்க்கையில் புயல் அடித்தது.”

“ என்னுடைய மாமியாருக்கு, கேன்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீடு, நோய்வாய்பட்ட மாமியாருக்கு உதவி என்று என்னுடைய வேலையை சமன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எனக்கு பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு என்னுடைய மாமியார் இறந்த ஆறுமாதங்கள் கழித்து, நான் என் வேலையை விட்டு விலகினேன். பின்னர் 2016-ம் ஆண்டு என் கணவருக்கு கேங்க்டாக் பகுதிக்கு மாறுதல் கிடைத்தது,” என்று தமது வாழ்க்கையில் நடந்த திருப்பங்களைப் பற்றிக் கூறினார்.

தமது உறவினர்கள், நண்பர்கள், முகம் தெரியாதவர்களுக்குக் கூட சாப்ரா நன்றி சொல்கிறார். தம் உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் அடி எடுத்து வைக்க ஊக்கமளித்தவர்கள் அவர்கள்தான் என்று சொல்கிறார். ஒரு முறை மால் ஒன்றில் முகம் அறியாத நபர் ஒருவர், அவரைப் பார்த்து ‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். இன்னொரு முறை, தூரத்து உறவினரான அத்தை ஒருவர், ‘உன்னுடைய கணவரை விட நீ வயது ஆன தோற்றத்துடன் இருக்கிறாய்’ என்று சொன்னார்.

“அவருக்கு என்னுடைய தைராய்டு பிரச்னை குறித்தோ, பாலிசிஸ்டிக் கருப்பை நோய் குறித்தோ தெரியாது. ஆனால் அவர் சொன்னது என் மனதை மிகவும் பாதித்தது. எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் என் உடல் எடையைக் குறைப்பது என்று முடிவு செய்தேன்,” என்கிறார் அவர்.

அப்போது, கல்லூரியில் படித்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு நடந்தது. சிங்கப்பூரில் இருந்து வந்த சாப்ராவின் தோழி ஒருவர் சாப்ராவை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்து, ‘முழுமையான ஒரு ஆண்டி போல இருக்கிறாய்’ என்று சொன்னதுடன், கல்லூரியில் படிக்கும்போது, விளையாட்டு, நாடகம் என்று எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாய் என்றும் சொன்னார்.

“என்னுடைய திட்டங்கள் செயலுக்கு வர அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்,” என்று சாப்ரா நினைவு கூறுகிறார்.

எப்படி அவர் தொடங்கினார்? “டயட் குறித்து எனக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை. எனவே, நான் நடைப்பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் 2 கி.மீ வரை கூட நடந்தேன். அப்போது மூச்சுவாங்கியதால் பிரச்னை ஏற்பட்டது. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறேன். நான் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக என் கணவர் எனக்கு டிரட்மில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு நாளைக்கு 3-4 முறைகள் நடைபயிற்சி செய்கிறேன்,” என நல்ல உடல் நலத்துக்கான தமது ஆரம்ப கட்டப்பயணம் குறித்து நினைவு கூறுகிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/11-05-19-03fit3.JPG

சரியானவற்றை உண்டால், எடை குறையும் என்ற கொள்கை மீது தீக்‌ஷா நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

 

“பட்டினி கிடந்தேன். சூப், சலாட் மட்டுமே சாப்பிட்டேன். அப்போது 18 கிலோ எடை குறைந்தேன். ஆனால், பார்ப்பதற்கு உடல் நலம் இல்லாதவள் போல இருந்தேன். என்னுடைய பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேதனையின் விளிம்பில் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். என்னவெல்லாம் விரும்பினேனோ அதையெல்லாம் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்.”

எதிர்பாராதவிதமாக, சரியான நுண்ணூட்ட சத்து எது என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். எங்கே தமக்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்தார்.

“இன்றைக்கு, ‘ஒருவர் சரியான உணவை சாப்பிட்டால், எடையை குறைக்க முடியும்’ என்று நான் பிறருக்கு அறிவுரை கூறுகிறேன். நீடித்த டயட் மேற்கொண்டால் எடையைக் குறைக்க முடியும், ஆரோக்கியமான உடலையும் தக்க வைக்க முடியும், மிளிரும் தோல் அழகைப் பெற முடியும். ரிசல்ட் கிடைக்க தாமதம் ஆகலாம் அல்லது விரைவாக கிடைக்கலாம். ஆனால், சாதகமான ரிசல்ட் உறுதி,” என்று கண்கள் மிளிர அவர் கூறுகிறார்.

சாப்ரா மூன்று பயிற்சிகளை வழங்குகிறார். 8000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பயிற்சி கட்டணம் இருக்கிறது. முதல் பயிற்சி, மூன்று வார பயிற்சி. குண்டாக உள்ளவர்கள், சரியான சாப்பிடும் முறையை கையாண்டால், 3-4 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.

இரண்டாவது பயிற்சி மூன்று மாதங்கள் கொண்டது. டயட் உடன், உடற்பயிற்சியும் கொண்டது. உடலை சிரமப்படுத்தாமல், உடலைக்குறைப்பதற்கு ஏற்ற சரியான பாதையில் அவர்களை அழைத்துச் செல்லும் பயிற்சி இது.

‘என்னை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுதல்’ என்ற பயிற்சி நான்கு மாதங்களைக் கொண்டது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்களுக்கானது. அவர்களுக்கு கலோரிகள் தேவை. அதே நேரத்தில் அதிக உடல் எடையை குறைக்கவும் விரும்புகின்றனர்.

“எனக்கு பொதுவாக மாதம் தோறும் 40-50 வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். பிறர் என்னைப்பற்றி சொல்வதன் மூலம் பலர் வருகின்றனர். சமூக வலைதளம் மூலமாகவும், டெகத்லான் (விளையாட்டு நிறுவனம்)முன்னெடுப்பு நிகழ்வுகளின் மூலமாகவும் தொடர்பு கொள்கின்றனர்,” என்று தமது வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுகிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/11-05-19-03fit4.JPG

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் தீக்‌ஷா. இன்ஸ்டாகிராமில், அவரை 10,90,00 பேர் பின்தொடர்கின்றனர்.


தொடர்ச்சியாக, அவரது வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் உடல் நலன் மற்றும் உடல் எடை குறித்த முன்னேற்றங்களை கண்காணிக்கிறார். “ஒவ்வொரு வாடிக்கையாளரும், தினமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். நான் அதை சரிபார்க்கிறேன். படங்கள், எடைக்குறைப்பு,மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுதல், தகவல் அனுப்புதல் என்று தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வாடிக்கையாளர்களை ஆய்வு செய்கிறோம். ஃப்ரீலேன்ஸ் சோஷியல் மீடியா மேனேஜர்கள் குழு மூலம், நான் தனியாக இதனை முன்னெடுத்துச் செல்கிறேன். என்னுடைய பெயரில், பொதுமக்கள் தொடர்பு, யூடியூப் சேனல் ஆகியவையும் தனிக்குழுக்களால் முன்னெடுக்கப்படுகின்றன.”

அவரை இன்ஸ்டாகிராமில் 10,90,000 பேர் பின்தொடர்கின்றனர். “டெகத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா, ஆப்டிமம் நியூட்ரீசியன் இந்தியா என்ற துணை பிராண்ட் ஒன்றுடனும் இணைந்து நான் பணியாற்றுகிறேன்,” என்று பிரகடனப்படுத்துகிறார் இந்த பிட்னஸ் குரு. அவர் சமீபத்தில் டெல்லியில் டெட் டாக்ஸ்-இல் (Ted Talks)  பங்கேற்றவர், ‘சிறிய விஷயங்களை பெரிதாகச் செய்தல்’ என்ற தலைப்பிலும், கோவாவில், வெற்றிகரமான பணிக்கு ‘சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பிலும் பேசினார்.

“ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி நிர்வகிக்கிறேன். என் மகன் பள்ளிக்கு(9வயது மகன்) சென்றிருக்கும்போதோ அல்லது தூங்கும்போதோ நான் பணியாற்றுகிறேன். இது, என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பதற்கு வசதியாக இருக்கிறது. உலகத்தில் எங்கிருந்தும் பணியாற்றுவதற்கும் இது என்னை அனுமதிக்கிறது,” என்று முடிக்கிறார் அவர்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • fulfilling the dream of his grandfather

    தாத்தா சொல்லை தட்டாதே

    ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Fresh Juice Makers

    சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!

    தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • he dreams of creating a rs 1,000 crore turnover company

    ஆயிரம் கோடி கனவு!

    கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Success with Robotics

    எந்திரன்!

    சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை

  • Doctor tastes succes in healthcare and hotelbusiness

    விரக்தியை வென்ற மனோசக்தி!

    மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.

  • juice Maker's success story

    ஒரு ஜூஸ் குடிக்கலாமா?

    வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை