Milky Mist

Saturday, 27 April 2024

அன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்!

27-Apr-2024 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 03 Sep 2018

அசாம் மாநிலத்தின் சிறிய நகரான தேஜ்பூரைச் சேர்ந்த ரோஷன் பெய்த், கடந்த 20 ஆண்டுகள் தொழில் முனைவு சாதனைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி இருக்கிறார். அடிட்டாஸ், ரீபோக் மற்றும் நைக் போன்ற பிராண்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி துறையில் தானும் புகுந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.

ரோஷன் தமது தந்தையிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, டெல்லியின் புறநகர்பகுதியில் துக்லஹாபாத் பகுதியில் 10 மெஷின்களுடன் ஒரு சிறிய தொழிற்சாலையைத் தொடங்கினார். இந்த சிறிய தொடக்கத்தில் இருந்து ரோஷன் நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/23-08-18-10alcis1.jpg

ரோஷன் பெய்த், விளையாட்டு வீரர்களுக்கான அல்சிஸ் என்ற இந்திய ஆடைகள் பிராண்ட்டை 2017ம் ஆண்டு தொடங்கினார். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக அடிட்டாஸ் மற்றும் ரீபோக் போன்ற சர்வதேச பிராண்ட்களுக்கான சப்ளையராக இருந்தார்.(படங்கள்: நவ்நிதா)


ரோஷன் முதன் முதலில் பாரகான் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 1997-ல் தொடங்கினார். அந்த நிறுவனத்தில் இருந்து அடிட்டாஸ், ரீபோக் போன்ற பிராண்ட்களுக்கு டி-சர்ட்கள், ஜாக்கெட்கள், டிராக் பேண்ட்கள், டிராக் சூட்கள் போன்றவற்றை தயாரித்துக் கொடுத்தார்.

கடந்த ஆண்டு, ரோஷன் அல்சிஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதே பெயரிலான லேபிளில் உள்ளூர் சந்தைக்கான, விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளைத் தயாரித்தார். அல்சிஸ் என்ற பிராண்ட் பெயரானது, ரோஷன் இந்த துறையில் பெரிய நிலையை அடைய உதவியது. பணத்தையும் கொடுத்தது.

இன்றைக்கு, இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து 5000 பேர் பணியாற்றுகின்றனர். இரு நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 240 கோடி ரூபாய் ஆக இருக்கிறது. அதில் முதல் ஆண்டில் மட்டும் அல்சிஸ் நிறுவனத்தின் 25 கோடி வருவாயும் அடக்கம்.

அல்சிஸ் இப்போது ப்ரோ கபடி லீக்கின் 6 அணிகளுக்கு அதிகாரப்பூர்வ ஆடைகள் சப்ளை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. “விளையாட்டு வீரர்களுக்கு நல்ல தரமான உடைகளை அதே நேரத்தில் இந்திய விலையில், நாங்கள் தர விரும்புகிறோம். இப்படித்தான் 2017-ம் ஆண்டில் அல்சிஸ் பிறந்தது,” என்கிறார் ரோஷன்.

“எங்களுடைய டி-சர்ட்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அடர்ந்த நிறங்களைக் கொண்ட சர்வதேச பிராண்ட்களைப் போல அல்லாமல், துடிப்பான நிறங்களைக் கொண்ட ஆடைகளைத் தயாரிக்கிறோம். இந்த ஆடைகள் கிருமிகளைத்  தடுப்பதுடன்  இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கின்றன,” என்று தங்கள் தனித்தன்மையைப் பகிர்கிறார் அவர்.

அவர்களுடைய சில டி-சர்ட்கள் மிகவும் லேசானவை. அதன் எடை 70 கிராம்தான். அவர்களுடைய தயாரிப்புகளின் விலை 399 ரூபாயில் இருந்து 1400 ரூபாய் வரை இருக்கின்றது.

முக்கியமாக அல்சிஸ், என்ற பிராண்ட்தான் ரோஷனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அதே போல நான்கு ஐ.பி.எல் மற்றும் ஐ.எஸ்.எல் டீம்களுக்கான ஆடைகளையும் தயாரிக்கிறது.

அசாம் மாநிலத்தின் சிறிய நகரமான தேஜ்பூரில் பிறந்த ரோஷன், விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளியில் படிக்கும்போது, மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அவருடைய தந்தை மோட்டார் பாகங்கள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். தமது மகனுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரிக்கு ரோஷன் சென்றார். அங்கு தமது பள்ளிப்படிப்பை முடித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/23-08-18-10alcis4.jpg

பாரகான் மற்றும் அல்சிஸ் இரண்டிலும் சேர்த்து 5000 பேர் பணியாற்றுகின்றனர்


“ஹாஸ்டலில் தங்கியிருந்தவன் என்ற வகையில், கடினமான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் நல்லதோ அல்லது கெட்டதோ எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் என்னை அது தயார்படுத்தியது,” என்கிறார் ரோஷன். பள்ளிப்படிப்பை முடித்த உடன், டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி படித்தார். பின்னர், 1995-ம் ஆண்டில் டெல்லி நிஃப்ட் நிறுவனத்தில் அப்பேரல் மார்க்கெட்டிங் &மெர்சண்டைசிங் படித்தார்.
பின்னர் ரோஷன், பெங்களூரில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் கோகுல்தாஸில் மாதம் 7000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கு 1995-முதல் 1997 வரை பணியாற்றினார். “அந்த வேலை எனக்கு போரடித்தது. எனவே நான் டெல்லிக்கு சென்றேன்,” என்று நினைவு கூறுகிறார். “என் தந்தையிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, ஆயத்த ஆடைகள் பிரிவை, டெல்லியின் புறநகர் பகுதியில் 10 மெஷின்களுடன் தொடங்கினேன்.”

பாராகன் நிறுவனம் பிறந்தது. முதல் ஆண்டில் அதன் ஆண்டு வருவாய் 40 லட்சம் ரூபாயாக இருந்தது. முதலில் அந்தப் பகுதியில் இருந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்துப் பணிகளைச் செய்தார். அந்த நிறுவனங்களிடம் இருந்து காலையில் மூலப்பொருட்களை வாங்கி, உடனே அதனை தைத்து முடித்து மாலையில் டெலிவரி கொடுத்தார்.

“என் தந்தையிடம் இருந்து கடன்வாங்கிய காரை பயன்படுத்தி வந்தேன்,” என்று சிரித்தபடி தம்முடைய ஆரம்பகாலங்கள் பற்றிச் சொல்கிறார் ரோஷன். “இது சில வருடங்களுக்குத் தொடர்ந்தது. இந்தப் பணியில் அவ்வளவாக நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய தொழிலை முன்னெடுப்பதற்கான வழிகள் என்ன என்று சிந்தித்தேன்.”

2001ம் ஆண்டு ரோஷனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவர் எதிர்பார்த்தபடி ரீபோக் நிறுவனத்துக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். இது அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை.

https://www.theweekendleader.com/admin/upload/23-08-18-10alcis3.jpg

அல்சிஸ் நிறுவனத்தின் வடிவமைப்பு டீம், சர்வதேச டிரெண்ட்டுக்கு ஏற்ப வடிவமைக்கிறது


இதன் பின்னர்,தொழில் நன்றாக வளர்ச்சியடைந்தது. “2010-ம் ஆண்டு எங்களுக்கு 2000 மெஷின்கள் இருந்தன. நொய்டாவில் உள்ள தற்போதைய தொழிற்சாலைக்கு மாறினோம். 2009-ம் ஆண்டு எங்களின் ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயைத் தொட்டது. இது தவிர, நொய்டாவில் எங்களுடைய பிரிண்டிங் மற்றும் எம்ப்ராய்ட்ரி தொழிற்சாலைகளையும் தொடங்கினோம்.  அதே போல இமாசலபிரதேசத்தில் பெரிய ஃபேப்ரிக் மில் ஒன்றையும் தொடங்கினோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார் ரோஷன்.

2012-ம் ஆண்டு இன்னொரு மைல்கல் ஆக அந்த நிறுவனத்துக்கு இருந்தது. “நாங்கள் கொரியன் நிறுவனத்துடன் இணைந்து, 45 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் தொழில்நுட்ப நவீன மெஷினரியை இறக்குமதி செய்தோம். இதன் மூலம், இந்தியாவிலேயே பெரிய விளையாட்டு ஆடைகள் பிராண்ட் சப்ளையராக ஆனோம்.”

அதிநவீன தொழில்நுட்பம் காரணமாக, அவர்களுக்கு உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைந்தது. முன்பு அவர்கள், அதிக விலையுள்ள ஃபேப்ரிக்கை தைவானில் இருந்து இறக்குமதி செய்தனர்.

விளையாட்டு வீரர்களுக்கான வசதியான ஆடைகளுக்கான வளர்ந்து வரும் இந்திய சந்தையை கைப்பற்ற ரோஷன் திட்டமிட்டார். அல்சிஸ் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆர்.பி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்கிற சிங்கப்பூர் நிறுவனம்  40 லட்சம் அமெரிக்க டாலர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து 25 சதவிகித பங்குகளை எடுத்துக் கொண்டது. அல்சிஸ் நிறுவனம், தமது முந்தைய நிறுவனமான பாரகானில் இருந்து உற்பத்திக்கான ஆதரவைப் பெற்றது.

இப்போது அல்சிஸ்-க்கு 700 கடைகள் இருக்கின்றன. ஷாப்பர்ஸ் ஸ்டாப், சென்ட்ரல் மால் ஆகியவற்றில் உள்ள கடைகள், மேலும் அவை போன்ற சில்லறை விற்பனையகங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. இது தவிர அவர்களுக்கு மெட்ரோ நகரங்களில் தனித்துவம் வாய்ந்த எட்டு சில்லறை விற்பனையகங்கள் உள்ளன. தவிர ஆன்லைனிலும் அவர்கள் விற்பனை செய்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/23-08-18-10alcis5.jpg

அல்சிஸ் பிராண்ட் அம்பாசிட்டராக, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை ரோஷன் நியமித்திருக்கிறார்

அல்சிஸ் பிராண்ட் அம்பாசிடராக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை ரோஷன் நியமித்திருக்கிறார். பிராண்டை முன்னெடுப்பதில் ரோஷன் தீவிரமாக இருக்கிறார். இப்போதைய நிதி ஆண்டின் இறுதியில் 65 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் எட்டி விட வேண்டும் என்று இலக்கை அவர் நிர்ணயித்திருக்கிறார்.

2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுக்கான நொய்டாவின் ஏற்றுமதி குழுமத்தின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பாரகன் பெற்றிருக்கிறது. இது தவிர, 2015ம் ஆண்டின் ஆடைகள் ஏற்றுமதி புரமோஷன் கவுன்சிலின் விருது பெற்றிருக்கிறது. 2016-ம் ஆண்டு டைம்ஸ் விருதின் இறுதிப்பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது.

வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது, ரோஷன் கூறியது: “உற்பத்தி செய்ததை சரியான நேரத்துக்கு டெலிவரி செய்ய வேண்டும். சரியான பொருள் சரியான நேரத்துக்கு வாடிக்கையாளரிடம் கிடைப்பதற்கு நீடித்திருக்கும் சப்ளை நெட்ஒர்க்கை கொண்டிருக்க வேண்டும். மற்றும் சரியான இடத்தில் பொருட்களைக் கிடைக்கச் செய்வதும் முக்கியமானது.”


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The Magnificent Seven

    அவங்க ஏழு பேரு…

    சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • success story of son of  a farmer

    ஒரு கனவின் வெற்றி!

    வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.

  • Former mill worker came close to starting a private airlines

    உயரங்களை எட்டியவர்

    ராஜ்குமார் குப்தாவின் கதை அசாதாரணமானது. ஆலைத் தொழிலாளியாக ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ச்சிபெற்றவர். சின்னதாக ஒரு குடியிருப்பைக் கட்டுவதில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை

  • success through sales

    சிறிய கடையில் பெரிய கனவு

    அரியானா மாநிலத்தில் பிறந்து, வேலை தேடி மும்பை சென்றவர் நானு. மாதுங்காவில் சிறிய கடையைத் தொடங்கியபோது அவருக்கு பெரிய கனவுகள் இருந்தன. இப்போது ஆண்டுக்கு 3250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர். வேதிகா சௌபே எழுதும் கட்டுரை

  • Man who stitched cloth bags as a child entrepreneur built a Rs 200 crore turnover company

    தலைக்கவச மனிதர்!

    நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்

  • Daughter of Punjab

    மண்ணின் மகள்

    பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை