Milky Mist

Tuesday, 19 March 2024

பேருந்து நிலையங்களில் பழங்கள் விற்றார் தந்தை; மகன் இன்று 200 கோடிக்கும் மேல் வருவாய் தரும் சங்கிலித் தொடர் பழக்கடை உரிமையாளராக வளர்ந்திருக்கிறார்

19-Mar-2024 By பி சி வினோஜ் குமார்
சென்னை

Posted 13 Jul 2018

1950-களில் கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 9 மற்றும் 11-வது வயதுள்ள இரண்டு சகோதரர்கள் படிப்பை விட்டு உள்ளூர் பழக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தனர். அவர்களது தந்தை இறந்து விட்டதால், குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க அவர்கள் வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது.

கடையில் அவர்கள் ஜூஸ் போடும் வேலை செய்தனர். பேருந்து நிலையங்களில் பழங்கள் விற்றனர். என்.சின்னச்சாமி, என்.நடராஜன் ஆகிய அந்த இரு சகோதரர்களும் கடுமையாக உழைத்தனர். ஒரு நாள் தாங்களும் சொந்த வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற கனவையும் மனதுக்குள் வளர்த்தனர்.

https://www.theweekendleader.com/admin/upload/oct25-14-LEAD1.jpg

கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவனர் என்.நடராஜன், தன் மகனும், தலைமை செயல் அதிகாரியுமான செந்தில் நடராஜனுடன்  


இக்கனவை நனவாக்க அவர்கள் தம் குறைவான சம்பளத்தில் இருந்து சில பைசாக்களை தினமும் சேமிக்கத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு ஸ்பின்னிங் மில்லில் அவர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்கள் இருவரும், அந்தச் சூழல் தந்த வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டனர். அந்த மில்லில் இருவரும் வெவ்வேறு  ஷிப்ட்களில் பணியாற்றினர். அவர்கள் நீண்டநாள் கனவை நிறைவேற்ற அவர்களுக்கு நேரம் கிடைத்தது.

இரண்டு சகோதரர்களும் (அப்போது 18 மற்றும் 20 வயதுடையவர்களாக இருந்தனர்) கோவையில் ஒரு பழக்கடை தொடங்கினர். மில்லுக்குச் சென்றுவிட்டு, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பழக்கடையை நடத்தினர்.

“அந்தக் கடைக்கு பழமுதிர் நிலையம் என்று பெயர். அந்தக் கடை தொடங்கப்பட்டது 1965-ம் ஆண்டு,” என்கிறார் நடராஜனின் மகனும், கே.பி.என்.ஃபார்ம் ஃபிரஷ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான செந்தில் நடராஜன். கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாற்றை அவர் சொல்கிறார். கோயம்புத்தூரில் இருந்து செயல்படும் அந்த நிறுவனத்தின் சார்பில் காய்கறிகள், பழங்கள் விற்கும் 40 சங்கிலித்தொடர் கடைகள் செயல்படுகின்றன. அந்தக் கடைகளின் ஒட்டுமொத்த ஆண்டு வருவாய் இந்த ஆண்டில் 220 கோடி ரூபாயாக இருக்கிறது.

1983-ல் கோவையில் பழமுதிர் நிலையத்துக்கு நான்கு கடைகள் இருந்தன. நடராஜனின் இளைய சகோதரர்கள் இரண்டு பேரும் கூட இதே தொழில் ஈடுபட்டனர்.

நான்கு சகோதரர்களும் அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் எனக் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நான்கு கடைகளில் இருந்து கிடைத்த லாபத்தை சம பங்காகப் பிரித்துக் கொண்டனர்.

அந்த ஆண்டில், அந்தக் குடும்பத்தினர் வர்த்தகத்தைப் பிரித்துக் கொண்டனர். தன் தம்பிகளுக்கு உயர்ந்தபட்ச வருவாய் வரும் கடைகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று மூத்த சகோதரர் முடிவு செய்தார்.

“குடும்பத்தின் இளைய சகோதரருக்கு அதிக வருவாய் வரும் கடை அளிக்கப்பட்டது.  மூன்றாவது சகோதரருக்கு ஆண்டு வருவாய் ஈட்டுவதில் இரண்டாவது இடத்தில் இருந்த கடை. என்னுடைய தந்தைக்கு அதற்கு அடுத்த அளவு ஆண்டு வருவாய் ஈட்டிய கடை தரப்பட்டது. என் தந்தையின் மூத்த சகோதரர் குறைந்த ஆண்டு வருவாய் தரும் கடையை எடுத்துக்கொண்டார்,” என்கிறார் செந்தில்.

குடும்பத்தின் இதர சகோதரர்கள் இன்னும் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் பழமுதிர் நிலையம் என்ற பெயரில் 9 கடைகள் நடத்துகின்றனர்.

இதில் செந்திலின் தந்தையான நடராஜன் மட்டும் கோவை பழமுதிர் நிலையம் என்ற பெயரில் தொழிலை தீவிரமாக விரிவு படுத்தினார். தமது இரண்டாவது கடையை 1998-ம் ஆண்டில் திருப்பூரில் தொடங்கினார்.

“ஒரு புதிய நகரில் (கோவையில் இருந்து 50 கி.மீ தொலைவில் இருந்த திருப்பூரில்)  கடையைத் தொடங்குவது மிகவும் கடினமான செயலாக இருந்தது. ஆரம்பகால கட்டங்களில் தினமும் சில ஆயிரம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டது. எனினும், நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றோம்.”

“இரண்டு ஆண்டுகளில் திருப்பூரில், தொழில் வலுவடையத் தொடங்கியது. என்னுடைய தந்தை சென்னைக்குச் செல்ல முடிவு செய்தார்,” என்று நினைவு கூறுகிறார் செந்தில். திருப்பூர் கடையில் ஆரம்பகால கட்டங்களில் நஷ்டம் ஏற்பட்டதை கண்டு செந்தில் தமது தந்தை தவறான முடிவு எடுக்கிறார் என்று நினைத்தார்.

“ஆனால், என் தந்தை எப்போதுமே தன்னம்பிக்கை கொண்டவர். ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு நூறுமுறை யோசனை செய்வார். ஒரு முறை தீர்மானித்து விட்டால், அதில்  ஈடுபாட்டுடன் செயல்படுவார். ஒருபோதும் பின்னால் திரும்பிப் பார்க்க மாட்டார்,” என்கிறார் செந்தில். இவர் கடந்த 2006-ம் ஆண்டு தந்தையுடன் தொழிலில் இணைந்தார்.

அப்போது சென்னையில் இரண்டு, கோவையில் இரண்டு, திருப்பூரில் இரண்டு என மொத்தம் எட்டுக் கடைகள் இருந்தன. இந்த கடைகளின் ஆண்டு வருவாய் 40 கோடி ரூபாயாக இருந்தது. 

பெரும்பாலான கடைகள் பங்குதாரர் அடிப்படையிலான கடைகளாக செயல்பட்டன. ஒவ்வொன்றிலும், பெரும்பாலான பங்குகளை குடும்பத்தினரே வைத்திருந்தனர். எனினும், அவர்களின் தொழில் எனும் ஆலமரம் கிளைகள்விட்டும், மொட்டுகள் விட்டும் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பரவி விரிந்தன. இந்த காலகட்டத்தில், சென்னையில் 21 கடைகள், திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி மற்றும் கேரளா மாநிலத்தில் கொச்சின் என 32 கடைகள் தொடங்கினர்.


முக்கியமான திருப்பமாக அவர்கள் தங்கள் கடைகளில் பால் பொருட்கள், சாக்லேட் வகைகள், பிரட் மற்றும் மளிகைப் பொருட்களையும் விற்கத் தொடங்கினர்.

“காய்கறிகள், பழங்களில் மக்களின் தேவை ஓரளவுக்குத்தான் இருந்தது. எனவே, அவர்களுக்குத் தேவைப்படும் இதரப் பொருட்களை ஏன் நாம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் நினைத்தோம். எனவே, நாங்கள் மேலும் பல பொருட்களை எங்கள் கடைகளில் கொடுத்தோம். தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதைக் கொடுத்தோம்,” என்கிறார் செந்தில்.

அவர்களின் மொத்த ஆண்டு வருவாயில், காய்கறிகள், பழங்கள் அல்லாத பொருட்களின் சதவிகிதம் 10 சதவிகிதமாக இருந்தது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த பங்கு 40 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

“எங்களின் முதன்மையான நோக்கம் என்பது எப்போதுமே காய்கறிகள் மற்றும் பழங்களாகத்தான் இருக்கிறது,” என்கிறார் செந்தில். அவர் தொழிலில் நுழைந்த உடன், அவரின் பங்களிப்பால், தொழில் சீரான வளர்ச்சி பெற்றது.

“மேலும் பல கடைகளைத் தொடங்கும்படி என் தந்தையை நான் ஊக்குவித்தேன். எனினும், என் தாய் எங்கள் எல்லோருக்கும் ஊக்கமளிப்பவராக இருந்தார். எங்கள் குடும்பத்தில் மிகவும்தீவிரமானவர் அவர்தான்,” என்கிறார் செந்தில்.

https://www.theweekendleader.com/admin/upload/oct25-14-LEAD2.jpg

தம் தந்தையின் கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு ஆகிய பண்புகளின் படி இந்த நிறுவனத்தை செந்தில் முன்னெடுத்துச் செல்கிறார்


யுக்திகள் வகுத்தல், புதிய கிளைகள், பொருட்களை கொள்முதல் செய்தல், இணையதள வணிகத்தை மேம்படுத்துதல், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தல் ஆகியவற்றில் செந்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

2012-ம் ஆண்டு அவர்கள் கே.பி.என். ஃபார்ம் ஃபிரஷ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இதில் 60 சதவிகித பங்குகளை அவர்கள் வைத்துள்ளனர். ஏற்கனவே கே.பி.என் கடைகளில் பங்குதாரரர்களாக இருக்கும் 6 பேருக்கு  40 சதவிகித பங்குகள்.

கே.பி.என் தனது வளர்ச்சிக்காக ப்ராஞ்சைஸ் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்போதைக்கு அவர்களுக்கு சென்னையில் ஒன்றும், பாண்டிச்சேரியில் ஒன்றும் என இரண்டு ப்ராஞ்சைஸ்கள் இருக்கின்றன. “ஒவ்வொரு மூன்று ப்ராஞ்சைஸ் கடைகளுக்கும், ஒரு கடையைச் சொந்தமாகத் தொடங்க வேண்டும்  என்று நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் செந்தில்.

இந்த நிறுவனத்துக்கு கோவையில் ஒரு கிடங்கு இருக்கிறது. சென்னை நெற்குன்றத்தில் (20.000 ச.அடி) ஒரு கிடங்கு இருக்கிறது. அடுத்ததாக சென்னை புறநகரில் வானகரத்தில் (50,000 ச.அடி) ஒரு புதிய கிடங்கு தொடங்கப்பட இருக்கிறது.

கடைகளுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்து சப்ளை செய்வது ஒரு நுணுக்கமான பணி. ஏனெனில் அது அழுகும் பொருள் சம்பந்தப்பட்டது. இந்தியா முழுவதும் தங்களது பல்வேறு தொடர்புகளைக் கொண்ட சந்தைகளில் இருந்து காய்கறி பழங்களைக் கொள்முதல் செய்கின்றனர். மொத்த சப்ளையில் 10 சதவிகிதப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கின்றனர்.

ஆரஞ்சுப் பழங்களை நாக்பூர் மற்றும் கங்காநகரில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். மாம்பழங்கள் ஆந்திராவில் இருந்து வருகின்றன. கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்குகின்றனர்.

2008-ம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் இருந்து பழங்களை இறக்குமதி செய்கின்றனர். வாஷிங்டன், நியூயார்க், சீனாவில் இருந்து ஆப்பிள்கள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, எகிப்து நாடுகளில் இருந்து ஆரஞ்சு பழங்களையும் இறக்குமதி செய்கின்றனர்.

பேரிக்காய், ப்ளம்ஸ், செரி பழங்கள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்கின்றனர். “எங்கள் கடைகளில் உள்ள 40 சதவிகிதப் பழங்கள் இறக்குமதி செய்யப்படவைதான்,” என்கிறார் செந்தில்.

இந்தியாவில் உள்ள உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரியை அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், இறக்குமதிச் செலவு அதிகரிக்கிறது. இறக்குமதி பில்லின் மதிப்பில் 50 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக செந்தில் சொல்கிறார்.

“இந்தியாவில் விளையும் பெரும்பாலான பழங்கள் அதற்குரிய பருவகாலத்தில்தான் கிடைக்கும். ஆனால், பழங்களை இறக்குமதி செய்வதால், ஆண்டு முழுவதும் அனைத்து வகைப்பழங்களையும் வாடிக்கையாளர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்,” என்கிறார் 31 வயதான, கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரியான செந்தில்.

 

https://www.theweekendleader.com/admin/upload/oct25-14-LEAD3.jpg

1965-ம் ஆண்டு கோவையில், தம் சகோதரருடன் இணைந்து பழக்கடை ஒன்றை தொடங்கியதன் மூலம் நடராஜனின் தொழில் முனைவுப் பயணம் தொடங்கியது.


2005-ம் ஆண்டு பட்டம் முடித்த உடன், அவர் ஐதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அவரது வேலை, கார்ப்பரேட் உலகம் எப்படி பணியாற்றுகிறது என்பதை அறியும் அனுபவத்தைக் கொடுத்தது.  

“கம்ப்யூட்டர் சார்ந்த பணியிலேயே நான் தொடர விரும்பினேன். சில காலம் கழித்துத்தான் குடும்பத்தொழிலில் இறங்குவது என்று தீர்மானித்தேன்,” என்கிற செந்தில், 2006-ம் ஆண்டு கோவையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தொழில் அவரை அழைத்தது. எனவே, அந்த சாப்ட்வேர் நிறுவனத்தை அவரால் முன்னெடுக்க முடியவில்லை.

ஆனால் 15 ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவுடன், அந்த சாப்ட்வேர் நிறுவனத்தை செந்தில் இன்னும் நடத்தி வருகிறார். “கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் 2.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் எட்டினோம். அந்த நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்புகிறேன்,” என்கிறார் செந்தில். அவருக்குச் சொந்தமாக ஒரு ரெஸ்டாரெண்டும் கோவையில் இருக்கிறது.

ரெஸ்டாரெண்டை அவரது மனைவி கவனித்துக் கொள்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். லட்சிய இலக்குகளுக்கு இடையே, அவரது குடும்பம் ஒரு பாதுகாப்பான, மெதுவான மற்றும் நிலையான வளர்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டிருக்கிறது.


“எங்களது நிறுவனம் லாபகரமானது. எங்களுடைய ஆண்டு வருவாயில் இரண்டு சதவிகிதம் லாபம் இருக்கிறது. வளர்ச்சி பெறுவதற்காக முதலீடாகக் கடன் வாங்குவதை எப்போதுமே என் தந்தை விரும்புவதில்லை. எங்களுடைய வளர்ச்சிக்கு எங்களின் குடும்பத்துக்கு உள்ளேயே நிதி திரட்டுவதைத்தான் சார்ந்திருக்கிறோம்,” என்று முடிக்கிறார் செந்தில்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Snack king

    ஒரு ‘நொறுக்’ வெற்றி!

    மணீஷுக்கு பதினொரு வயதாக இருந்தபோது தந்தை செய்துவந்த தொழில் நொடித்துபோனதைக் கண்டார். அந்த நிலையில் இருந்து மீண்டு, உள்ளூரிலேயே நொறுக்குத்தீனி தயாரிப்பு தொழிலை தொடங்கி இன்றைக்கு ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக அதனை கட்டமைத்திருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • juice Maker's success story

    ஒரு ஜூஸ் குடிக்கலாமா?

    வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை

  • Success story of a Wireman

    ஒரு வயர்மேனின் வெற்றிக்கதை

    வேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • overseas educator

    ஆந்திர சிவாஜி!

    தொழில் தொடங்கும் ஆசையில் அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் தொழில் தொடங்கினார் அரவிந்த் அரசவில்லி என்னும் இளைஞர். ஒன்பது ஆண்டுகள் ஆனநிலையில் 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Success with Robotics

    எந்திரன்!

    சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை

  • Hardwork pays

    பள்ளத்தில் இருந்து சிகரத்துக்கு!

    ஏழாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம், தற்கொலை முயற்சி என வாழ்க்கையின் ஆரம்பக்காலம் கல்பனா சரோஜுக்கு துன்பமயம். ஆனால் இப்போது ஆண்டுக்கு 2000ம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களின் தலைவராக சாதித்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? தேவன் லாட் எழுதும் கட்டுரை