Milky Mist

Friday, 26 April 2024

மணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்!

26-Apr-2024 By பி சி வினோஜ் குமார்
சென்னை

Posted 05 May 2018

எஸ்.அகமது மீரான், 19-வது வயதில் 1975ம் ஆண்டில், இளநிலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது தொலைபேசி துறையில் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டார். 180 ரூபாய் மாதச் சம்பளத்துடன் அவருக்கு வேலை கிடைத்தது.

மீரான் திருநெல்வேலி மாவட்டம், களக்காடு டவுன் பஞ்சாயத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தன் சொந்தக்காலில் நின்று வாழ வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-04-18-02zlead1.jpg

புரபஷனல் கொரியர் நிறுவனத்தை தோற்றுவித்த இயக்குனர்களில் ஒருவர் எஸ்.அகமது மீரான். சென்னையில் உள்ள கிளை இவருக்குச் சொந்தமானது. இவரது ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாய். (புகைப்படங்கள்: ரவிக்குமார்)


வெற்றி மீதுள்ள ஆசையின் விளைவாக, சரியான பாதையை நோக்கிப் பயணித்தார்.   முதலில் வேலையை ராஜினாமா செய்த அவர், ஒரு டிராவல் ஏஜென்சி தொடங்கினார். பின்னர், இந்தியாவில் லாபம் தரும் கொரியர் தொழிலின் முன்னோடிகளில் ஒருவராக  குறிப்பிடத்தக்கச் சாதனை படைத்தார். 

புரபசனல் கொரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Professional Couriers Private Limited) நிறுவனத்தை 7 பேருடன் இணைந்து 1987-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம் பிரான்சைஸ் எனப்படும் முகமை மாடலை கட்டமைத்தது. மீரான், அதன் சென்னை உரிமையாளராக (proprietorship) தானே  வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்கிறார். அவரிடம்  2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 90 கிளைகளுடன், இப்போதைய ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயாக இருக்கிறது. புரபஷனல் கொரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் மீரான் இருக்கிறார்.

ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக செலவு செய்கிறோம். என்னுடைய வாழ்நாளில், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளேன் என்ற வகையில் இது எனக்கு அளவுகடந்த திருப்தியை அளிக்கிறது,” என்கிறார் மீரான்.

தொலைபேசித் துறையில் மூன்றாவது பிரிவு ஊழியராக தமது பணியைத் தொடங்கியவர் மீரான். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் அந்தக் காலத்தில் வாடிக்கையாளர்களின் எண்களுடன், அவர்கள் கேட்கும் தொலைபேசி எண்களுக்கு இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

“டெலிபோன் ஆபரேட்டராக எனக்கு வேலை கிடைத்தபோது, பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். இந்த வேலைக்கு 11-ம் வகுப்பு சான்றிதழுடன், 80 சதவிகித மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த வேலைக்கு விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு மூலம் வேலைக்குத் தேர்வானேன்,” என்கிறார் மீரான். வேலைக்குச் சேர்ந்தபின்னர் தொலைநிலைக் கல்வி வழியே பி.காம் மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்து, பட்டம் பெற்றார்.

டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு, ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரூபாய் வீதம், தினமும் 6 மணி நேரம் என, ஒவ்வொரு நாளும் அவருடைய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை பார்த்தார். மாதம் தோறும் 180 ரூபாய் சம்பாதித்தார்.

“என்னுடைய முதல் போஸ்டிங் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போடப்பட்டிருந்தது. லாட்ஜில் அறை ஒன்றில் நானும் என் நண்பரும் தங்கினோம். வாடகையைப் பகிர்ந்து கொண்டோம். என்னுடைய சம்பளம், அறைக்கு வாடகை கொடுப்பதற்கும், என்னுடைய உணவு செலவுக்கும் போதுமானதாக இருந்தது,” என்கிறார் மீரான். மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் மூத்தவர் என்ற முறையில், அவருடைய குடும்பத்தை கவனிக்க வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது.

தந்தையின் வருமானத்தைச் சார்ந்தே அவரது குடும்பம் இருந்தது. அவருடைய தந்தை, கிராமத்தில் வாடகை சைக்கிள் கடை ஒன்று நடத்தி வந்தார். பின்னர் கொழும்பு சென்ற அவரது தந்தை, அங்கே பல ஆண்டுகள் சில மளிகைக்கடைகளில் கேஷியராகப் பணியாற்றினார்.

https://www.theweekendleader.com/admin/upload/28-04-18-02z1.jpg

சென்னையில் உள்ள புரபஷனல் கொரியர் நிறுவனத்தில் 2000-த்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர்


நாகர்கோவிலில் இருந்து 40 கி.மீ தொலைவில்  இருக்கும் கிராமத்தில் உள்ள சிறிய நிலத்தில், அவரது தாய், நெல் மற்றும் பருவகாலப் பயறுவகைகளைப் பயிரிட்டு வந்தார். “நாங்கள் பொருளாதாரத்தில் கீழ் நடுத்தர வர்க்கத்தில் இருந்த குடும்பம்,” என்கிற மீரானுக்கு இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

பல்வேறு நல்ல விஷயங்களைத் தாயிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அவர் சொல்கிறார். “என் தாய், என் ஆசிரியர்கள், மசூதியில் கேட்கும் உரைகள் ஆகியவற்றில் இருந்து நான் நல்ல மதிப்பீடுகளைக் கற்றுக் கொண்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து, உள்ளூர் நூலகத்தில்  படிக்கும் புத்தகங்களில் இருந்தும் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.”

ஒரு சுய உந்துதல் கொண்ட மனிதராக, டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் சுவிட்ச் போர்டில் வாடிக்கையாளர்களுக்கான அழைப்புகளை மாற்றிக் கொடுப்பதை விடவும், மேலும் அதிகமாக சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.

பி.காம். பட்டப்படிப்பு கையில் இருந்தது. தொலைபேசி துறையில் பதவி உயர்வு கிடைப்பதில் கவனம் செலுத்துவது அல்லது பணியில் இருந்து விலகி ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற இரண்டு வழிகள்தான் அவர் முன் இருந்தன. அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்.

“ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதால், என் மாதச் சம்பளத்தில் இருந்து சேமிக்கத் தொடங்கினேன். என்னுடைய சம்பளம் உயர்ந்ததால், என்னால் சேமிக்க முடிந்தது. 1983-ம் ஆண்டு என்னுடைய பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அங்கே நான், பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொடுப்பது, விமானம், ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொடுப்பது போன்ற பணிகளுக்காக டிராவல் ஏஜென்சி தொடங்கினேன்.

“அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே 125 ச.அடி அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அலுவலகம் அமைத்தேன். இதற்கு அட்வான்ஸ் ஆக 10,000 ரூபாயும், மாத வாடகை 1,500 ரூபாயும் கொடுத்தேன். போன் இணைப்புத் தரவும், மூன்று பணியாளர்களுக்காகவும், நான் கூடுதல் தொகையை முதலீடு செய்தேன். தினமும், பல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது,” என்று நினைவு கூறுகிறார் மீரான்.

https://www.theweekendleader.com/admin/upload/28-04-18-02z3.jpg

தமிழகம் முழுவதும் புரபஷனல் கொரியர் நிறுவனத்துக்காக முகமைகளைக் கொண்ட நெட் ஒர்க்கை மீரான் கட்டமைத்தார்


அதன் பின்னர், ஒரு ஆண்டுக்குள் பாதுகாப்பான மத்திய அரசு வேலையை விட்டு விலகினார். முழு நேரத் தொழில் முனைவோராக மாறினார்.

“கூடுதல் தொழில் வாய்ப்புகள் குறித்து நான் தேடத் தொடங்கினேன். என் நண்பர்களிடமும் அது குறித்துச் சொல்லி வைத்தேன். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு நண்பர், கொச்சியில் இருந்து செயல்படும் கொரியர் நிறுவனமான கோஸ்ட் கொரியர் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சென்னையில் ஒரு ஏஜென்ட் நியமிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

“சென்னையில் அவர்களுக்கு ஏற்கனவே சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த தொழில் வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்காக இரண்டு ஊழியர்களை நியமித்தேன். மொத்த வருவாயில் இருந்து 15 சதவிகிதம் கமிஷனாகப் பெற்றேன். 1985-ம் ஆண்டுக்கு மத்தியில் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டபோது, எங்கள் மாத வருவாய் 1,500 ரூபாயாக இருந்தது. ஆனால், ஒன்றரை வருடத்துக்குள் 10 மடங்கு அதிகமாக 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உயர்ந்தது,” என்று நினைவு கூறுகிறார் மீரான்.

மீரான் விரைவாக, வர்த்தகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கொரியர் சேவைக்கு இந்தியாவில் அது ஆரம்ப கட்டம்தான். எனவே, மீரான் அவரே வாடிக்கையாளர்களிடம் பேசி ஆர்டர்கள் பெற்றார்.

இந்தியன் வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு அவரே நேரில் சென்று கொரியர் டெலிவரி செய்தார். அவருடைய வாடிக்கையாளர்களிடம் மும்பை போன்ற நகரங்களில் இருந்து முந்தைய நாள் கொடுக்கப்பட்ட ஆவணங்களை மறுநாள் டெலிவரி செய்ய முடிவதைச் சுட்டிக்காட்டுவார்.

“நீங்கள் ஏதேனும் ஒரு ஆவணம் கொடுத்தாலும் கூட, மும்பை போன்ற நகரங்களுக்கு அடுத்த நாளே நாங்கள் டெலிவரி செய்வோம் என்று அவர்களிடம் சொன்னேன்,” என்கிறார் மீரான். அந்நேரத்தில் கொரியர் வசதி டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே இருந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/28-04-18-02z7.jpg

பஜாஜ் எம் 80 ஓட்டியது முதல் சொந்தமாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கியது வரை மீரான் நீண்ட பயணத்தைக் கடந்து வந்திருக்கிறார்


“நான் பஜாஜ் எம்.80  பைக் வைத்திருந்தேன். ஆரம்ப காலகட்டங்களில் அதில்தான் தினமும் கொரியர் பாக்கெட்களை கொடுக்கவும், வாங்கவும் விமானநிலையம் செல்வேன்,” என்று நினைவு கூறுகிறார் மீரான். இப்போது அவர் ஒரு சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். அதில்தான் அவர் பயணிக்கிறார். 

1986-ம் ஆண்டில், கொச்சியில் சில மாற்றங்கள் நடந்தன. எனவே, பல்வேறு நகரங்களில் இருந்த கோஸ்ட் கொரியர் நிறுவன ஏஜென்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த மீரான் உட்பட 8  பேர் அதில் இருந்து விலகினர். அவர்கள் ஒன்றிணைந்து கோஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஒரு புதிய கொரியர் நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர், சட்டப்பிரச்னை காரணமாக 1987-ம் ஆண்டு  புரபஷனல் கொரியர்ஸ் என்று நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். தொழில் விரிவாக்கம் பெற்றது.

ஒவ்வொரு முகமையும், தனிப்பட்ட உரிமையாளர்களைக் கொண்டிருந்தது. ஆனால், வணிக பரிமாற்றங்களுக்காக புரபஷனல் என்ற பிராண்ட் பெயரை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் மாத வருவாய்க்கு ஏற்ப, நிறுவனத்துக்கு ராயல்டியாக 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலுத்தினர்.

தமிழகத்தில் வலுவான நெட் ஒர்க்கை ஏற்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் முகவர்களை நியமிக்கும் பொறுப்பை சென்னையில் இருந்த மீரான் எடுத்துக் கொண்டார். “கொரியர் நிறுவனம் தொடங்கும்போது, திருநெல்வேலியில் ஒரே ஒரு முகவர்மட்டும்தான் இருந்தார். விரைவிலேயே முக்கியமான நகரங்களில் எல்லாம் முகமைகள் தொடங்கப்பட்டன. ஒரு அலுவலகம், தொலைபேசி இணைப்பு, சில பணியாளர்கள் வைத்திருக்கும் நபர்களை முகவர்களாக எதிர்பார்த்தோம். அந்த நாட்களில் 7,000 ரூபாய் முதலீட்டில், பலர் முகவர்களாக ஆனார்கள்.

“ஒரு நகரில் உள்ள முகமையின் கீழ், கிளைகள் செயல்பட்டன. இன்றைக்கு எங்களுக்கு 9000 கிளைகள் இருக்கின்றன. தமிழகத்தில் புரபஷனல் என்ற பிராண்ட்டின் கீழ் 8,000 பேர் பணியாற்றுகின்றனர்,” என்கிறார் மீரான். அவருக்கு இப்போது 62 வயது ஆகிறது. இப்போது காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கொரியர் தொழிலின் சிறப்பான நாட்கள் முடிவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. எனவே தொடர்ந்து நீடித்திருக்க புதிய வாய்ப்புகளையும் ஆராய வேண்டி இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/28-04-18-02z.jpg

இப்போது புரபஷனல் கொரியர் தமது வணிகத்துக்காக இ-காமர்ஸ் இணையதள வாடிக்கையாளர்களுடனும் இணைந்திருக்க முயற்சிக்கிறது 


“1993-2002-க்கு இடையே எங்கள் தொழில் ஆண்டு தோறும்15-20 சதவிகிதம் வளர்ச்சி பெற்றது. ஆனால், 2002-ம் ஆண்டுக்குப் பிறகு மின்னஞ்சல், குறுந்தகவல், இணையதள வங்கிச்சேவை ஆகியவை மக்களிடம் புகழ்பெற்றன. இதனால், எங்கள் வணிகம் பாதிக்கப்பட்டது. ஆவணங்கள் மற்றும் காசோலைகளை கொரியரில் அனுப்புவது குறைந்தது.”

“ஆகவே மருந்துப் பொருட்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அடங்கிய சிறிய பார்சல்களையும் டெலிவரி செய்யும் பணிகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இப்போது, இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் பணிகளையும் செய்வது பற்றி சிந்திக்கிறோம்,” என்கிறார் மீரான்.

மீரானின் மனைவி பெயர் நிஹார் ஃபாத்திமா. அவரது மகன் ஷேக் ஷபீக் அகமது (30), ஃபைனான்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருக்கிறார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங் படிப்பை முடித்திருக்கிறார். இப்போது அவர் இ-காமர்ஸ் நிறுவனங்களுடனான தொடர்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரது மகள் ஷமீனா சுல்தானா (25) இஸ்லாமிய கல்வியில்  பட்டம் பெற்றிருக்கிறார்.

மீரான், 2004-ஆம் ஆண்டு கல்வித்துறையிலும் கால் பதித்திருக்கிறார்.  சென்னையில் யுனிட்டி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் சி.பி.எஸ்.இ பள்ளியைத் தொடங்கினார். இப்போது அந்தப் பள்ளியில் 2,400 பேர் படிக்கின்றனர்.

எப்படி அவர் தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்கிறார் என்று கேட்டதற்கு, சில நொடிகள் சிந்தித்த பின்னர் சொல்கிறார், “நான் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் என் வழக்கமான வேலையில் இருந்து, முழுவதுமாக ஓய்வு எடுக்கிறேன். அவ்வளவாக பயணங்கள் செய்வதில் ஆர்வம் இல்லாவிட்டாலும்கூட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, குடும்பத்துடன் மெக்கா மற்றும் மதினாவுக்கு சென்று வருகிறேன். தவிர எப்போதாவது சிங்கப்பூர், மலேசியாவுக்கும் செல்வோம்.” மீரான் வேலையை நேசிப்பவர். அவருக்கு இதைவிட ரிலாக்ஸ் செய்துகொள்ள எது பெரிதாக தேவைப்படப்போகிறது?


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Man who worked in salon owns Rs 11 crore turnover company

    அழகான வெற்றி

    கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை

  • Bareilly’s  king of oil

    மலையளவாகப் பெருகிய கடுகு!

    உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது.  அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு  மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Success Story of Detox Juice maker

    இளமையில் புதுமை

    சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

  • This businessman sold vada pav and repaid Rs 55 lakh debt

    சுவையான வெற்றி

    மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

    சிறகு விரித்தவர்!

    அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்