Milky Mist

Friday, 29 March 2024

அன்று 20 ரூபாய் கூட கையில் இல்லை! இன்று 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் !

29-Mar-2024 By தேவன் லாட்
புனே

Posted 13 Apr 2018

புனேவில் உள்ள மானே குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் ராம்தாஸ் மான்சிங் மானே (58), ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும்  தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவரது குழும நிறுவனங்களில்10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றனர். விரியக்கூடிய திறன் கொண்ட  பாலிஸ்டைரீன்  (Expandable Polystyrene) தெர்மோக்கூல் (Thermocol) மற்றும் தெர்மோகூல் மெஷினரிகளை தயாரித்து ஏற்றுமதி செய்கிறார். இந்தியாவில் உள்ள தெர்மோகூல் மெஷினரிகளில் 80 சதவீதம் அவரது நிறுவனத் தயாரிப்புகள் தான்.

https://www.theweekendleader.com/admin/upload/05-04-18-02mane1.JPG

ராம்தாஸ் மான்சிங் மானே வயர்மேன் பயிற்சியை முடித்திருக்கிறார். ஆனால், அவரது வாழ்க்கையில், விதி வேறு விதமான திட்டங்களை வைத்திருந்தது. இன்றைக்கு அவர் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். (புகைப்படங்கள்: மனோஜ் பாட்டீல்)


ஆனால், இதில் ஒரு முரண் என்னவென்றால், ஒரு காலத்தில் அவரது பெரிய லட்சியம் என்பது, உள்ளூர் பள்ளியில் பியூன் வேலையில் சேர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

“நான் நன்றாகப் படித்தேன். ஆனால், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கவில்லை,” என்று சிரிப்புடன் பகிரும் ராம்தாஸ், ”நான் பத்தாம் வகுப்பு முடித்த உடன், ஒரு பியூன் வேலைக்காக விண்ணப்பித்தேன்,” என்கிறார். 

மகாராஷ்டிரா மாநிலம் சாதாராவில் உள்ள லோதாவாடா என்ற சிறிய கிராமத்தில் அவர் பிறந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் ஒரு சீரான வளர்ச்சியில் இருந்தது. சாதாராவில் பள்ளிப்படிப்பை முடித்த உடன், மேலும் படிக்க விரும்பினார். ஆனால், அப்போது அவருக்கு நிதி உதவி ஏதும் கிடைக்கவில்லை.

“நான் விவசாயப் பண்ணைகளில் வேலை பார்த்தேன். ஆனால், வெயில் காரணமாக கடும் வெப்பத்தால் பணியாற்ற முடியுமா என்ற கவலை ஏற்பட்டது. எனவேதான், பியூன் வேலைக்கு செல்ல முயற்சித்தேன். ஏனென்றால், அரசு பள்ளியில் மின்வசதியும், மின்விசிறியும் இருந்தது,” என்கிறார் ராம்தாஸ்.

பத்தாம் வகுப்பு (SSC) முடித்த உடன், பியூன் வேலைக்காக, 1975-ம் ஆண்டு தமது கிராமத்தில் இருந்த முதியவரான ஜனார்தன் லோகாரை சந்தித்தார். ஆனால், பியூன் வேலைக்குப்  பதில் வயர்மேன் பயிற்சி பெற்றால் நல்லது என்று லோகார் அவருக்கு அறிவுறுத்தினார்.

“கிராமம் முழுவதும் விரைவில் மின் வசதி கிடைக்க இருக்கிறது. எனவே வயர்மேன் பயிற்சி முடித்தால், பயனுள்ளதாக இருக்கும் என்னிடம் அவர் கூறினார்,” என்று நினைவு கூறுகிறார் ராம்தாஸ். “முதன் முறையாக மின் வசதி கிடைத்த அந்த நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சுவிட்ச் போட்ட உடன் எப்படி பல்ப் எரிகிறது என்று கிராமத்தினர் வியப்புடன் பார்த்தனர்.’’

எனவே, அவர் வயர்மேன் பயிற்சிக்காக சாதாரா தொழிலக பயிற்சி மையத்துக்கு விண்ணப்பம் செய்தார். எளிதாக இடம் கிடைத்தது. இந்த பயிற்சி நிறுவனம் அவரது கிராமத்தில் இருந்து தூரத்தில் இருந்தது. அங்கு போவதற்குப் பணம் இல்லை. தங்கி படிப்பதற்கும் இடம் இல்லை. பயிற்சியில் சேர்ந்த முதல் நாள் இரவு, தங்குவதற்கு இடம் இல்லாமல் கல்லூரிக்கு அருகில் உள்ள போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் தங்கினார்.

https://www.theweekendleader.com/admin/upload/05-04-18-03mane5.JPG

புனேயில் உள்ள தமது தொழிற்சாலையில், தமது ஊழியர்கள் சிலருடன் மானே


“அப்போது பேருந்து நிலையத்தில் கேன்டீன் நடத்தி வந்த ஷெட்டி என்பவர், தமக்கு உதவியாளர் வேண்டும் என்று கேட்டதாக தகவல் கேள்விப்பட்டேன். எனவே, அங்கு மாதம் நான்கு ரூபாய் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கேயே நான் தங்க ஆரம்பித்தேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார். “இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அங்கு வேலை பார்த்தேன். அதன் பின்னர் ஏழு மணிக்கு கல்லூரிக்குச் செல்வேன்.”

ராம்தாஸ் இரண்டு வருடங்களில் வயர்மேன் பயிற்சியை முடித்தார். 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார். 1978-ம் ஆண்டு, புனேவில் உள்ள மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

“புனே செல்வதற்கு, என்னிடம் பணம் இல்லாததால், என் பாட்டியிடம் 20 ரூபாய் கேட்டேன். அந்த நாட்களில் ஒரு முதிய பெண்ணுக்கு அந்தத் தொகை மிகப்பெரிய தொகை. எனினும், அவர் எனக்கு 20 ரூபாய் கொடுத்தார். அதை வைத்து நான் புனே பயணித்தேன். எனக்கு வேலை கிடைத்தது,” என்கிறார் ராம்தாஸ்.

மாதம் 100 ரூபாய் உதவித் தொகையுடன், வயர்மேன் பயிற்சிப் பணியைத் தொடங்கினார். இன்னொருவருடன், ஒரு சிறிய அறையை அவர் பகிர்ந்து கொண்டார். வெற்றிக்கான நீண்ட பயணத்தை அவர் தொடங்கினார். இன்றைக்கு, ராம்தாஸ் 2000 சதுர அடி வீட்டில் வசிக்கிறார்.

மகேந்திராவில் ஏழு வருடங்கள் பணியாற்றினார். அதே நேரத்தில், ஐ.எம்.இ-யில் (Institution of Mechanical Engineers) மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்தார்.

1984-ம் ஆண்டு அவர் ஷோபா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவர்கள் வசிப்பதற்காக, 30 ஆயிரம் ரூபாய்க்கு புனே சக்ரபாணி வசந்த் பகுதியில் வாங்கியிருந்த 2000 ச.அடி இடத்தில் ஒரு வீடு கட்டினார். இதற்கு ஒரு ஆண்டு கழித்து, ஃபினோலக்ஸ் பைப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பராமரிப்புப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

1993-ம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் துணைப் பொதுமேலாளராகப் பதவி உயர்வு பெற்றார். ஆனால், அவரது மேலதிகாரி உடனான வாக்குவாதம் காரணமாக அந்த வேலையை சீக்கிரத்திலேயே ராஜினாமா செய்தார். ஃபினோலக்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, பஜாஜ் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பொதுமேலாளராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ராகுல் பஜாஜ் உடனான நேர்காணலுக்காக மூன்று மாதம் காத்திருக்க வேண்டி இருந்தது.

https://www.theweekendleader.com/admin/upload/05-04-18-03mane3.JPG

உலகின் மிகப்பெரிய இ.பி.எஸ் மெஷினை தயாரித்து லிம்கா ரிக்கார்டில் மானே இடம் பிடித்தார்


“மூன்று மாதங்கள் எனக்கு வேலை இல்லை. நேரத்தை வீணாகச் செலவிடுவதை விட, சில வேலைகளைச் செய்து தருவது  என்று சிந்தித்தேன்,” என்று விவரிக்கிறார் ராம்தாஸ். “தெர்மாலைட் என்ற நிறுவனம், அவர்களின் இ.பி.எஸ் (விரியக்கூடிய திறன் கொண்ட  பாலிஸ்டைரீன்) மெஷினுக்கு கன்ட்ரோல் பேனல் உருவாக்கும்படி கூறியது. ஆறு மாதத்தில் நான் 6 கன்ட்ரோல் பேனல்களை உருவாக்கினேன்.”

இ்ந்த வெற்றிகரமான முயற்சிக்குப் பின்னர், மேலும் பல ஒப்பந்தங்கள் தேடி வந்தன. விரைவிலேயே அவர், வெற்றிகரமாகத் தொழிலை நடத்த ஆரம்பித்தார்.

மெட்ராஸ் பேர்ட் ஷெல் லிமிடெட் என்ற நிறுவனம் அவரைத் தொடர்பு கொண்டு, 70 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு கன்ட்ரோல் பேனல் உருவாக்கித்தரும்படி கேட்டது. அதன் பின்னர், ஒட்டு மொத்த இ.பி.எஸ் பிரிவுக்குமான ஒப்பந்தத்தை அவருக்குக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து, ஐதராபாத், பெங்களூரு தொழிலகங்களின் திட்டங்களும் அவருக்குக் கிடைத்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் அவர் 3 லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெற்றார். 1994-ல் மானே எலக்ட்ரிக்கல் என்ற ப்ரோப்பரைட்டர்ஷிப் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.

1997-ல் வங்கிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, போஸ்ரீ-யில் உள்ள மகாராஷ்டிரா தொழிலக வளர்ச்சி வாரியத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்தார். 6 பேரை ஊழியர்களாகவும் நியமித்தார். 

வாய்வழி விளம்பரம் மூலமாகவே, பல்வேறு ஒப்பந்தங்கள் அவருக்கு கிடைத்தன. சவூதி அரேபியாவில் உள்ள குர்ஷ் எனும் வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து 6 லட்சம் டாலருக்கு ஒப்பந்தம் கிடைத்தது. “இது ஒரு பெரிய ஒப்பந்தம். ஆர்டரை பூர்த்தி செய்ய நாங்கள் ஒரு புதிய அலுவலகம் மற்றும் தொழிலகம் கட்டினோம்,” என்கிறார் ராம்தாஸ்.

கென்யா, துபாய், கானா, லிபியா, ஏமன், சூடான், இலங்கை மற்றும் சவூதி அரேபியா உட்பட 45 நாடுகளில் இப்போது மானே எலக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 350 இ.பி.எஸ் திட்டங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். உலகத்திலேயே பெரிய இ.பி.எஸ் மெஷினை தயாரித்து லிம்கா உலக சாதனையிலும் இடம் பெற்றிருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/05-04-18-03mane2.JPG

தெர்மோகூல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு கழிவறை வசதிகளை மானே கட்டித்தருகிறார்


5 துணை நிறுவனங்கள் உட்பட, ஒட்டு  மொத்த மானே குழும நிறுவனங்களின் கடந்த ஆண்டின் ஆண்டு வருவாய் 25 கோடி ரூபாய். 2017-18ம் ஆண்டில் இது 30 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “1995-ம் ஆண்டு அதாவது முதல் ஆண்டில், என்னுடைய ஆண்டு வருவாய் 3 லட்சமாக இருந்தது,” என்று புன்னகையுடன் நினைவு கூறுகிறார் ராம்தாஸ்.

இன்றைக்கு, தெர்மோகூலில் செய்யப்பட்ட சிறிய கழிவறைகளை உருவாக்கி, ஏழை மக்களுக்குத் தானமாகக் கொடுத்து சமூகத்துக்கு, தம் நன்றிக்கடனை திருப்பி அளிக்கிறார். இது நாள் வரை இது போன்ற 22 ஆயிரம் கழிவறைகளை அளித்திருப்பதாக அவர் சொல்கிறார்.  

ராம்தாஸ் ஏற்கனவே 150 நாடுகளுக்கு சென்றிருக்கிறார். சில சமயங்களில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்கிறார். புனேவுக்கு பஸ்ஸில் பயணம் செய்வதற்கு போதுமான பணம் இல்லாத காலம் எல்லாம் அவருக்கு இருந்தது என்பதை, இப்போது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Daughter of Punjab

    மண்ணின் மகள்

    பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • King of mattress sale

    மெத்தென்று ஒரு வெற்றி

    மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Best seller

    கூச்சத்தை வென்றவர்

    டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • from rs 1,500 salary to owner of rs 250 crore turnover company

    வெற்றிப் படிக்கட்டுகள்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை

  • Wow! They sell 1.5 lakh momos everyday

    சுவை தரும் வெற்றி

    கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை

  • A cup full of success

    தேநீர் கடை தந்த வெற்றி!

    மூன்று லட்ச ரூபாய் முதலீட்டில் அந்த இளைஞர் ஆரம்பித்தது ஒரு தேநீர்க்கடை. அது இன்று 145 சங்கிலித்தொடர் கடைகளாக 100 கோடி ஆண்டு வர்த்தகத்துடன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தைத் சேர்ந்த அனுபவ் துபேவின் வர்த்தக அனுபவம் பற்றி எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்.