Milky Mist

Tuesday, 19 March 2024

ஃபர்னிச்சர் விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள் இந்த முதல் தலைமுறை இளம் தொழிலதிபர்கள்! மூன்றே ஆண்டுகளில் 18 கோடி வருவாய்!

19-Mar-2024 By பார்தோ பர்மான்
புதுடெல்லி

Posted 16 Feb 2018

ராஜஸ்தானை சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஃபர்னிச்சர் தொழிலில் ஒரு புதிய அலையை உருவாக்கி உள்ளனர். மூன்று வருடங்களுக்குள்ளாக 18 கோடி ரூபாயை ஆண்டு வருவாயாக ஈட்டி உள்ளார்கள்.

லோகேந்திரா ரனாவத், தினேஷ் பிரதாப் சிங், வீரேந்திரா ரனாவத் மற்றும் விகாஸ் பிகேதி ஆகிய நால்வரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான்.
2015-ம் ஆண்டு ஆன்லைன் வழியே, ஃபர்னிச்சர் தொழில் தொடங்கும் வரை ஃபர்னிச்சர் தொழில் பற்றி அவர்களுக்கு பெரிதாக எந்தவித விஷயமும் தெரியாது. தொழில் முனைவுத்திறன், கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். 

https://www.theweekendleader.com/admin/upload/16-01-18-10fun1.jpg

லோகேந்திரா ரனாவத், தினேஷ் பிரதாப் சிங், வீரேந்திரா ரனாவத்,விகாஸ் பிகேதி ஆகியோர்  வுட்டன் ஸ்ட்ரீட் இணையதளத்தை உருவாக்கினர். இதன்மூலம் தாங்கள் பார்த்து வந்த நல்ல வேலைகளைத் துறந்து விட்டு, ஒன்றும் தெரியாத துறையில் நுழைந்தனர். ஆனால், கடின உழைப்பின் மூலம் அந்தத் துறையில் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர் (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

“2015-ம் ஆண்டு, வுட்டன் ஸ்டீர்ட்(Wooden Street) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்கள் எல்லோருக்கும் இந்த நிறுவனத்தில் சம அளவுகளைக் கொண்ட பங்குகள் உள்ளன. 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்தத் தொழிலில் கால்பதித்திருக்கும் நாங்கள் நால்வருமே முதல் தலைமுறை தொழில் முனைவோர்,” என்கிறார் தலைமை செயல் அதிகாரி லோகேந்திரா.  அவர்களுடைய நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை ஜோத்பூரில் 2015 ஜூனில்தொடங்கப்பட்டது.

2015-16-ம் ஆண்டு தொழில் தொடங்கிய முதல் ஆண்டில், அவர்களின் ஆண்டு வருவாய் 2 கோடி ரூபாயைத் தொட்டது. 2016-17-ம் ஆண்டில் இது 18 கோடி ரூபாயாக உயர்ந்தது. வெறும்10 ஊழியர்களுடன் இந்தத் தொழிலைத் தொடங்கினார்கள். இப்போது 100-க்கும் மேற்பட்ட தச்சுக்கலைஞர்களுடன் அவர்களுக்கு ஒரு வலுவான குழு உள்ளது. என்ஐடி (அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு மையம்)-யில் படித்த 12 வடிவமைப்பாளர்களும் பணியாற்றுகின்றனர்.

"2015-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஷெல்ப் செய்து தருமாறு எங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்,” என்று நினைவு கூறுகிறார் லோகேந்திரா. இன்றைக்கு, இந்தியா முழுவதும் 15 பெரிய நகரங்களில், தயாரிக்கப்பட்ட ஃபர்னிச்சர்களை 5 வாரத்துக்குள் வழங்குவோம் என்று வுட்டன் ஸ்டீர்ட் உறுதி அளிக்கிறது.

நாளொன்றுக்கு 10,000 பேர் என மாதம் தோறும் 3 லட்சம் பேர் அவர்களின் இணையதளத்துக்கு வருகைதருகின்றனர். அவர்களில், லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பே டிஎம் நிறுவனத்தின் நிறுவனர், கேப்ஜெமினி இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட பலர் தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

விற்பனை மற்றும் சந்தைப்பிரிவில் பத்து ஆண்டு அனுபவத்துக்குப் பின், 2012-ம் ஆண்டு ஒரு சொந்தத்தொழில்தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லண்டனில் இருந்து திரும்பி வந்த லோகேந்திரா, இப்போது  உற்பத்தி மற்றும் விற்பனையைக் கவனித்துக் கொள்கிறார்.
ஜெய்ப்பூர் கியான் விஹார் ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், அவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். பின்னர், காசியாபாத்தில் உள்ள ஐடிஎம் கல்வி நிறுவனத்தில் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவில் எம்.பி.ஏ படித்தார். பின்னர் பிர்லா சாப்ட் மற்றும் ஆக்சிஸ் ஐடி&டி-யில் (IT&T) இந்தியா மற்றும் லண்டனில் பணியாற்றினார்.

தினேஷ், எம்.என்.ஐ.டி-ஜெய்ப்பூரின் முன்னாள் மாணவர். கோழிக்கோடில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படித்தார். கொள்முதல் மற்றும் பொதுநிர்வாகத்தில் இவர் வல்லுனராக இருக்கிறார். சிங்கப்பூரில் உள்ள பிராக்டர் &கேம்பிள் நிறுவனத்தில் பணியாற்றினார். இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் அறிவியல் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினார். வுட்டன் ஸ்ட்ரீட் நிறுவனத்தில் இப்போது இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் தொடங்க இருக்கும் கடைகளைக் கவனித்துக்கொள்வதுதான் இவரது பணி.

https://www.theweekendleader.com/admin/upload/16-01-18-11fun3.jpg

வுட்டன் ஸ்ட்ரீட்டுக்கு இப்போது நான்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஜோத்பூர், ஜெய்ப்பூரில் தலா இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூரில் நான்கு கடைகள் உள்ளன.

பொறியாளராக இருக்கும் வீரேந்திரா, புனே ஐஐஎம்எம் கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ முடித்திருக்கிறார். டாடா மற்றும் எனர்கோ நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். நிதி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். விகாஸ், நிதிப் பிரிவில் பட்டம்பெற்றிருக்கிறார். டெல் மற்றும் வெர்டெக்ஸ் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜோத்பூரில் உள்ள தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகிறார்.

இந்த நான்குபேரும், நல்ல சம்பளம் தந்த வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, தங்களது அனுபவத்தைக் கொண்டு இ-வணிகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தொடங்க முடிவு செய்தனர். “என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்வது எங்களுக்கு எளிதான வேலையாக இருக்கவில்லை,” என்று சொல்லும் லோகேந்திரா, “பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர், ஃபர்னிச்சர் தொழிலில் இறங்குவது என்று முடிவு செய்தோம்,” என்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக ஃபர்னிச்சர் சந்தை குறித்து அவர்கள் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டனர். மிகப் பெரிய ஃபர்னிச்சர் சந்தையில்,  இருக்கும் கடைகளில் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ற அளவுகளில், வடிவமைப்புகளுடன் கூடிய பொருட்கள் தேவையான அளவுக்கு இல்லை என்பது தெரிய வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தரமான வடிவமைப்பு, மர வகைகளின் உண்மைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படவில்லை. பெரும்பாலான ஃபர்னிச்சர்கள், இறக்குமதி செய்யப்பட்ட பிளைவுட்டில் உருவாக்கப்பட்டதாக இருந்தன. 

சந்தையின் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதற்கு, இதைப் போதுமான வாய்ப்பாக அவர்கள் கருதினர். இது தங்களுக்கான வாய்ப்பு என்றும் கருதினர். ராஜஸ்தானில் இருக்கும் மாவட்டங்களில் உள்ள 50 முதல் 60 கிராமங்களுக்குச் சென்ற அவர்கள் பல நாட்களாக அங்கிருக்கும் உள்ளூர் தச்சர்களுடன் பேசினர். எல்லாத் தரப்பினரிடமும், இதை லாபகரமான தொழிலாக மேற்கொள்வது பற்றி விவாதித்தனர்.

“ ‘வுட்டன் ஸ்ட்ரீட்’ என்று எங்கள் நிறுவனத்துக்குப் பெயர் வைத்தோம். மர வகைகளை மூலதனமாகக்  கொண்ட  தொழில் என்பதால் அந்தப் பெயர்,” என்கிறார் லோகேந்திரா. “நாங்கள் 2013-ம் ஆண்டு இணையதளத்துக்கான பெயரை பதிவு செய்தோம்.”

இணையதளத்துடன், 10 ஊழியர்கள் மற்றும் ஜோத்பூரில் கிடங்குடன் கூடிய தொழிற்சாலையையும் அவர்கள் அமைத்தனர். 2015-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வுட்டன் ஸ்ட்ரீட் செயல்பாட்டுக்கு வந்தது.

அவர்களின் 90 சதவிகித ஃபர்னிச்சர்கள்,  கருங்காலி மரத்தில் செய்யப்படுகின்றன. மீதி பத்து சதவிகித ஃபர்னிச்சர்கள் மா மரம், கருவேலம் மரத்தில் செய்யப்படுகின்றன.“வாடிக்கையாளர்களுக்கான ஃபர்னிச்சர்களை தனித்தன்மையுடன் கொடுக்கும் திறனைப் பெற்றிருப்பதுதான் எங்களது தனித்தன்மை வாய்ந்த விற்பனை உத்தியாகக் கருதுகிறோம்,” என்கிறார் லோகேந்திரா. “வீட்டின் அறை எந்த அளவில் இருந்தாலும், பிரச்னை இல்லை. எங்களால் அதற்கு பொருந்தும் ஃபர்னிச்சர்களை தர முடியும். ஒரே வடிவிலான ஃபர்னிச்சரை  மீண்டும் விற்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை.”

https://www.theweekendleader.com/admin/upload/16-01-18-11fun2.jpg

இடமிருந்து வலமாக: வுட்டன் ஸ்ட்ரீட் நிறுவனர்கள் லோகேந்திரா ரனாவத், தினேஷ் பிரதாப்சிங், வீரேந்திரா ரனாவத் மற்றும் விகாஸ் பேகேதி

இணையதளத்துக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான ஃபர்னிச்சர்களைத் தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு என்ன விருப்பம் என்பதைக் குறிப்பிடுகின்றனர் அல்லது குறிப்பான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.  எங்களிடம் இருக்கும் வடிவமைப்பாளர்கள், தேவையான வரைபடங்கள் மற்றும் 3டி மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு செய்து காட்டுகின்றனர்.

“வாடிக்கையாளர்களிடம் ஆர்டர்கள் பெறுவதற்காக 3டி மாடல் தயாரிக்கப்படுகிறது. அதன் பின்னர்தான், தொழிற்சாலையில் ஃபர்னிச்சர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன,” என்று விவரிக்கிறார் சி.இ.ஓ லோகேந்திரா.

இப்போது நான்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஜோத்பூரில் இரண்டும், ஜெயப்பூரில் இரண்டும் இருக்கின்றன. 13 அலுவலகங்கள் மற்றும் பல கடைகளும் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (Experience Store) என்ற பெயரில் மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு ஹைதராபாத், புனே, டெல்லி, சென்னை ஆகிய இடங்களிலும் எக்ஸ்பீரியன்ஸ் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தனித்தன்மை வாய்ந்த விற்பனை முறை குறித்து கேட்டபோது, “நாங்கள் செயல்முறைகளில் கவனம் செலுத்துகிறோம்.  மரக்கட்டைகளைப் பதப்படுத்தல், முறையான இணைப்பு முறைகள் மற்றும் ஸ்மார்ட் பசை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறோம்,” என்று விவரிக்கிறார் தினேஷ். “மரக்கட்டைகளைப் பதப்படுத்தல் என்பது வலுவுக்கான ரகசியம் என்று கூடச் சொல்லலாம். பாலீஷ் செய்யப்பட்ட பின்னர், அந்த ஃபர்னிச்சர்கள் பார்ப்பதற்கு லேசாகவும், நன்றாகவும் இருக்கும்.”

இன்றைக்கு இந்த நான்கு தொழில் அதிபர்களும், பேப் ஃபர்னிச்சர், அர்பன் லேடார் மற்றும் பெப்பர் ஃபிரை ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றனர். சில பெரிய நிறுவனங்கள் வுட்டன் ஸ்டீர்ட் நிறுவனத்தை வாங்கிக் கொள்வதாகவும் கூறின. ஆனால், அவர்களிடம், இந்த நிறுவனத்தை விற்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டனர். தங்களது நிறுவனத்துக்கு வளமான எதிர்காலம் இருப்பதை நால்வரும் உணர்ந்திருக்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/16-01-18-11fun4.jpg

வுட்டன் ஸ்ட்ரீட்  நிறுவனத்தின் 90 சதவிகித ஃபர்னிச்சர்கள், ஈட்டி மரத்தில் செய்யப்படுகின்றன.

“நாங்கள் எங்கள் வேலைகளில் இருந்து விலகி, தொழில் முனைவோர் ஆகிவிட்டோம். இன்னொருத்தருக்காக இனிமேலும் பணியாற்ற, நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எனவேதான், எங்கள் நிறுவனத்தை வாங்குவதற்கு பலர் முன் வந்திருக்கின்றனர்,” என்கிறார் லோகேந்திரா.

வணிக உத்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, ஒவ்வொரு மாதமும் 700-800 யூனிட்கள் விற்பனையாகின்றன என்பதை அவர் சொல்கிறார். 400-500 வரையிலான தனித்தன்மை வாய்ந்த வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கின்றனர். “இந்தத் தொழிலில் 15-16 சதவிகித ஆர்டர்கள் மீண்டும், மீண்டும் கிடைக்கக் கூடியவை. ஆனால் நாங்கள் 32 சதவிகிதம் வரை இத்தகைய ஆர்டர்களைப் பெறுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகவும், திருப்திகரமாகவும் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது,”என்கிறார் அவர்.

டைம்ஸ் தொழில்முனைவோர் விருது 2016, ஹிந்துஸ்தான் டைம்ஸ் எக்ஸலன்ஸ் அவார்டு 2016, ஐஐடி பாம்பே-யால் வழங்கப்படும் எஸ்.ஐ.என்.இ-யால் வழங்கப்படும் (புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் சொசைட்டி) உயர்ந்த புதுமை கண்டுபிடிப்புக்கான விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் அலையில் வுட்டன் ஸ்ட்ரீட் தன் பெயரை உயர்ந்த இடத்தில் பதித்திருக்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • pioneer in courier industry

    தன்னம்பிக்கையின் தூதுவர்

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Success Story of Detox Juice maker

    இளமையில் புதுமை

    சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

  • success through Kitchen

    பணம் சமைக்கும் குக்கர்!

    வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே  சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை

  • Doctor tastes succes in healthcare and hotelbusiness

    விரக்தியை வென்ற மனோசக்தி!

    மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.

  • Success story of  a Raymond Franchisee

    ஒரு முகமையின் வெற்றிக்கதை

    வழக்கறிஞரின் மகனாக இருந்த சைலேந்த்ரா, தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற கனவுடன் 50 ஆயிரம்ரூபாய் முதலீட்டில் டெக்ஸ்டைல் ஷோரூம் தொடங்கினார். இன்றைக்கு ரேமண்ட் பிராண்டின் முகவராக ஆண்டுக்கு 22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • water from thin air

    காற்றிலிருந்து குடிநீர்!

    தலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா?  இது உண்மைதான்!  ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.