முதல் சேலையை 60 ரூபாய்க்கு விற்றவர், இன்று 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்!

ஜி.சிங் Vol 2 Issue 2 புலியா, மேற்கு வங்கம் 08-Jan-2018

காலங்கள் கடந்து 40 ஆண்டுகள் ஓடிவிட்டன. சேலைகளை மூட்டையாக கட்டி,  தோளில் சுமந்துகொண்டு கொல்கத்தாவின் வீதிகளில்வீடு, வீடாக வாடிக்கையாளர்களைத் தேடி அலைந்திருக்கிறார் பைரன் குமார் பசக். அவர், ஒருபோதும் அந்த நாட்களை மறக்கவில்லை.

இன்றைக்கு தன் 66-வது வயதில் அவர் சேலை வியாபாரத்தில் வெற்றிகரமான தொழிலதிபர். நாடு முழுவதும் உள்ள துணிக்கடைகளுக்கு சேலைகள் விற்கும் மொத்த வியாபாரியாக இருக்கிறார். அவரது ஆண்டு வருவாய் 50 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/16-12-17-03sari2.JPG

பைரேன் குமார் பசக், கொல்கத்தாவில் வீடு வீடாகச் சென்று சேலைகள் விற்பனை செய்து, வெற்றிகரமான தொழிலதிபர் ஆகி இருக்கிறார். கைத்தறியால் நெய்யப்பட்ட சேலைகளை விற்பனை செய்யும் அவர் 5000 நெசவாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். (புகைப்படங்கள்;மோனிரூல் இஸ்லாம் மல்லிக்)


அவருடைய தொழில் முனைவுத் திறன், கடின உழைப்பு ஆகியவை 1987-ல் எட்டுப்பேருடன் இணைந்து சொந்தமாக ஒரு கடை திறக்கும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. படிப்படியாக தொழிலை அவர் முன்னெடுத்துச்சென்றார். இன்றைக்கு அவர், ஒவ்வொரு மாதமும்,நாடு முழுவதும் 16,000 கைத்தறி புடவைகளை விற்பனை செய்கிறார். அவரிடம் 24 பேர் பணியாற்றுகின்றனர். தவிரவும் 5000 நெசவாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார்.

அவரிடம் பல பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, இசையமைப்பாளர் உஸ்தாத் அம்ஜத் கான், நடிகை மவுஸூமி சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள நாடியா மாவட்டம் புலியாவில் உள்ள அவரது வீட்டுக்கு நாம் சென்றபோது, முதல் நிகழ்விலேயே, அவரது எளிமை, மற்றும் மென்மையான பேச்சு என்னைக் கவர்ந்தது.

அவருக்குச் சொந்தமாக அரண்மனை போன்ற பங்களா இருக்கிறது. அவருடைய காரேஜில் மிக விலை உயர்ந்த நவீன ரக கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இதன் எந்த  அடையாளமும் அவர் முகத்தில் தெரியவில்லை. பைரேன் எளிமையானவராக நம்முன் அறிமுகம் ஆகிறார். 

1951-ம் ஆண்டு மே 16-ம் தேதி கிழக்கு பாகிஸ்தானில்(இப்போது வங்கதேசம்) தான்கைல் மாவட்டத்தில் பைரேன் பிறந்தார். அவரது குடும்பத்தில் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். இவர் 6 பேரில் இளையவர். நெசவாளர் குடும்பம்.  அவரது தந்தை பாங்கோ பிகாரி பசக் நெசவாளர் மட்டுமல்ல; கவிஞரும் கூட.

“என்னுடைய தந்தையின் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. கவிஞராக ஒரு முறை மேடையில் தோன்றுவதற்கு 10 ரூபாய்தான் அவருக்குக் கிடைத்தது,” என்று நினைவுகூறுகிறார் பைரேன். “அது ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை.அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் விளைந்த பொருட்கள் எங்கள் குடும்பத்தின் உணவுத் தேவைக்குப் போதுமானதாக இருந்தன.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/16-12-17-03sari1.JPG

பைரேன் மனைவி பாணியும், அவரது தொழிலுக்கு உதவி செய்து வருகிறார்.

 

தான்கைல் பகுதியில் உள்ள ஷிப்நாத் உயர் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்தார். “என்னுடைய பள்ளிப்படிப்புக்கு மத்தியில், உள்ளூர் கோவில் புரோகிதரிடம், பாசுரங்கள் பாடக் கற்றுக்கொண்டேன். என்னுடைய சிறு வயதிலிருந்தே, என் இயல்பிலேயே நான் கடவுளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். இது எனக்கு அமைதியைத் தருகிறது,” என்று தமது சிறுவயது நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

1962-ம் ஆண்டு மதரீதியான பதற்றங்கள் நிலவிய சூழலில், அவரது குடும்பம் தான்கையிலில் இருந்து புகுலியாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்தது. “இரவு நேரத்தில் நாங்கள் வீட்டை விட்டு ஓடினோம். பகல் நேரத்தில் வெளியேறுவது பெரும் அபாயமாக இருந்தது,” என்கிறார் பைரேன். “நான், என்னுடைய மூத்த சகோதரர் மற்றும் பெற்றோர் இங்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பு, இதர குடும்ப உறுப்பினர்கள் இங்கே வந்திருந்தார்கள்.”

அவருக்கு நன்றாக இன்னும் நினைவு இருக்கிறது. அவர்கள் எல்லையைத் தாண்டி வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபூர்துவார் பகுதியை அடைந்தபோது, அவரது தந்தையிடம் சுத்தமாக பணம் ஏதும் இல்லை.

“நான் தங்க சங்கிலி ஒன்று அணிந்திருந்தேன். என் தந்தை அதை விற்று அதில் கிடைத்த பணத்தில்தான் உணவுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் எல்லை தாண்டியபோது ரயில் டிக்கெட் வாங்கக் கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே, ரயிலின் மேற்கூரையில் அமர்ந்துதான் பயணித்தோம்,” எனும் பைரேன், அந்த சமயத்தில் தங்களிடம் இருந்த அனைத்தையும் வங்கதேசத்திலேயே விட்டு விட்டு வந்து விட்டோம் என்று நினைவுகூறுகிறார்.

அவரது குடும்பத்தின் பணத் திண்டாட்டம் அவரை மேற்கொண்டு படிக்க அனுமதிக்கவில்லை. புகுலியா, நெசவாளர்கள் அதிகம் வசித்த இடம்.  உள்ளூரில் ஒரு இடத்தில் பைரேன் சேலைகள் நெய்ய ஆரம்பித்தார். தினமும் 2.50 ரூபாய் சம்பாதித்தார். அடுத்த எட்டு வருடங்களுக்கு அதே தொழிற்சாலையில், குடும்பத்தின் வருமானத்துக்கு உதவும் வகையில் பணியாற்றினார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/16-12-17-03sari6.JPG

அபிநபா (25), பைரேனின் மகன், தந்தையின் தொழிலில் உதவுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார்.


1970-ம் ஆண்டில், சொந்தத்தொழில் தொடங்க தீர்மானித்தார். புகுலியாவில் 1968-ம் ஆண்டு அவரது சகோதரர்கள் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ரூபாய் 10 ஆயிரம் கடன் வாங்கத் திட்டமிட்டார்.

இளைய சகோதரர் தீரன் குமார் பசக் உடன், கொல்கத்தாவுக்கு சேலைகளை எடுத்துச் சென்று விற்கத் தொடங்கினார். “உள்ளூர் நெசவாளர்களிடம் சேலைகள் வாங்கி, அதை கொல்கத்தாவில் விற்பதற்காக எடுத்துச் சென்றோம்,” என்று விவரிக்கிறார் பைரேன்.

“தினமும் காலை 5 மணிக்கு, உள்ளூர் ரயிலில் ஏறி நகருக்குச் செல்வோம். எங்கள் தோள்களில் 80 முதல் 90 கிலோ வரையிலான சேலைகளை தூக்கிக் கொண்டு வீடு, வீடாகச் சென்று விற்பனை செய்வோம். பல கி.மீ தூரம் நடந்தே செல்வோம். இரவு தாமதமாக வீடு திரும்புவோம், மீண்டும் மறுநாள் அதிகாலை புறப்படுவோம்.”

அவர்களது இந்தக் கடின உழைப்பு, அவர்களுக்கு உரிய பலனைத் தந்தது. நல்ல தரமான சேலைகளை, விலை குறைவாக அவர்கள் விற்பனை செய்ததால், அதிக அளவுக்கு வாடிக்கையாளர்களைப் பெற்றனர்.

“வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நல்ல ஆர்டர்களும் கிடைக்கத் தொடங்கின. நாங்கள் லாபம் சம்பாதிக்கத் தொடங்கினோம்,” என்கிறார் பைரேன். 1978-ம் ஆண்டில் இரண்டு சகோதரர்களும் சேர்ந்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தனர்.

1981-ம் ஆண்டு, இருவரும் சேர்ந்து தெற்கு கொல்கத்தா பகுதியில் 1,300 ச.அடி இடத்தை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கினர். 1985-ல் சகோதரர்கள் இருவரும், தீரன் மற்றும் பைரேன் பசக் அண்ட் கம்பெனி என்ற பெயரில் கடையைத் தொடங்கினர். சேலைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தனர். அடுத்த ஒரு ஆண்டிலேயே அவர்களின் கடை வருவாய் ஒரு கோடி ரூபாயைத் தொட்டது. 

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/16-12-17-03sari8.JPG

பைரேனின் பணரீதியான வெற்றி அவருக்கு செல்வத்தைக் கொண்டு
வந்தது. ஆனால், இன்னும் அவர், தன்கால்களை உறுதியாக தரையில்தான் வைத்திருக்கிறார்.


விரைவிலேயே சகோதரர்கள் இருவரும், பிரிவது என்று முடிவு செய்தனர். 1987-ல் பைரேன் புகுலியா வந்தார். “ 70 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை சேமிப்புப் பணம் என்னிடம் இருந்தது. கிராமத்து வாழ்க்கையை நேசிப்பவன் என்பதால், நான் என் கிராமத்துக்கே திரும்பி வந்தேன். என் சகோதரருடனான வியாபாரத் தொடர்பு முடிவுக்கு வந்ததும், என்னுடைய பாரம்பரிய வேரைத் தேடி வருவது என்று முடிவு செய்தேன்,”என்று விவரிக்கிறார் பைரேன்.

வெறுமனே பணத்தை மட்டும் துரத்திக் கொண்டு செல்லாமல், தெய்வீக பாடல்கள் மீதான தமது விருப்பத்தை அவர் தொடர நினைத்தார். “ஆன்மீக மனதுடன் இருப்பவர்கள், பணத்துக்காக ஆசைப்படக் கூடாது,” என்கிறார் புன்னகைத்தபடி.

 அவர், கற்பனை திறன் உடையவர். அத்துடன் சேலை வடிவமைப்பையும் விரும்புவர். அவர் சேலை மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவது என திட்டமிட்டார். கொல்கத்தாவில் இருந்து திரும்பி வந்ததும், 1987-ல் சொந்தக் கடையை தொடங்கினார். தமது வீட்டிலேயே பைரேன் பசக் அண்ட் கம்பெனி என்ற பெயரில், எட்டு ஊழியர்களுடன் நிறுவனத்தைத் தொடங்கினார். 

“800 நெசவாளர்களிடம் இருந்து சேலைகள் கொள்முதல் செய்தோம்,” எனும் பைரேன், “ஏற்கனவே, நான் சேலை டீலர்களிடம் தொடர்புகளைக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு என் புதிய கடை பற்றித் தெரிவித்தேன். நான் வளரத் தொடங்கியபோது, கொல்கத்தாவில் உள்ள என் சகோதரரின் கடையில் விற்பனை குறையத் தொடங்கியது. நான் மிகவும் கற்பனைத் திறனுடன் சிறந்த வடிமைப்பு உடன் கூடிய சேலைகளைக் கொடுத்ததால், என்னால் வடிவமைக்கப்பட்ட சேலைகளையே மக்கள் விரும்பினர்.”

2016-17-ம் ஆண்டில் அவரது நிறுவனம், 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டது. ஆனாலும், அவர் தன் முதல் நாள் வியாபாரத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். தமது கடையின் முதல் சேலையை அவர் 60 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

பைரேன் 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். அவரது மனைவி பாணியும் அவருக்குப் பெரும் ஆதரவு தருகிறார். அவர்களுக்கு அபிநபா(27) என்ற மகன் இருக்கிறார். அவர் இன்னும் தமது தந்தையின் வியாபாரத்தில் கால் பதிக்கவில்லை.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/16-12-17-03sari4.JPG

பைரேன் தமது வெற்றிக்கு, அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு, நேர்மை, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றைக் காரணமாகச் சொல்கிறார்


“என்னுடைய வியாபாரத்தில் என் மகனை இன்னும் அனுமதிக்கவில்லை. அவன், சிறிய அளவில் நூல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறான்,” எனும் பைரேன், “வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அவன் உணர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். பணத்தின் முக்கியத்துவத்தை உணரும் போது அவன் என்னுடைய வியாபாரத்தில் நுழையலாம். அது மட்டும்தான் அவனுக்கு வெற்றியைத் தரமுடியும்.”

2013-ம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சந்த் கபீர் விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளை இந்தத் தொழிலதிபர் பெற்றுள்ளார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை விடவும், அவரது வெற்றிக்கு அவரின் முழுமையான ஆன்மீக ஈடுபாடும் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்.

வளரும் இளம் தொழிலதிபர்களுக்கு அவர் கூறும் அறிவுரை: அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக கடவுள் நம்பிக்கையுடன் பணியாற்றவேண்டும். முக்கியமாக,  பணக்காரர் ஆகும் போது ஒருபோதும் கர்வம் உள்ளவராக இருக்கக் கூடாது.

அதிகம் படித்தவை

  • Tuesday, April 07, 2020