தொழிலதிபர் ஆன மாலுமியின் வெற்றிக்கதை!

தேவன் லாட் Vol 1 Issue 29 மும்பை 25-Oct-2017

முசாபர்பூரில் இருந்து மும்பைக்கு அவரது பயணம் எளிதானதாக இருக்கவில்லை. ஆனாலும் 42 வயதாகும் தொழிலதிபர் புர்னேந்து சேகர் அதை பெரிதாக நினைக்காமல் உற்சாகமாக இருக்கிறார்.  அவர் கோகோபோர்ட் என்ற முக்கியமான சரக்குகள் கையாளும் நிறுவனம் நடத்துகிறார். நிறுவனம் ஆரம்பித்து ஓராண்டுகூட ஆகவில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்ற அளவுக்கு வெற்றிப்பாதையில் பயணிக்கிறார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/15-09-17-06cogo1.JPG

 

புர்னேந்து சேகர் கோகோபோர்ட்டை தனி ஆளாகத் தொடங்கினார். இப்போது 50 பேர் கொண்ட நிறுவனமாக எட்டு அலுவலகங்களுடன் வளர்ந்துள்ளார். (படங்கள்: அசார் கான்) 

 

ப்ளிப்கார்ட் நிறுவனம் போலவே கோகோபோர்ட்டும் வேகமாக வளர்ந்துள்ளது. கிடங்குகளில் இருந்து சரக்குகளை கப்பலுக்கு எடுத்துச்செல்வது, ட்ரக்குகளின் மூலம் பொருட்களைக் கையாளுதல், சுங்கம் மற்றும் துறைமுகக் கட்டணங்கள் போன்ற சேவைகளை ஒரே கூரையின் கீழ் இது தருகிறது.

ஓராண்டில் கோகோபோர்ட் சுமார் 64 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. சுமார் 9000 கண்டெய்னர்களை ஏற்றியிருக்கிறது ட்ரக்குகள் மூலம் 2500 முறை சரக்குகள் கையாண்டிருக்கிறது.  

இளம் மாலுமியாக இருந்த புர்னேந்து வெற்றிகரமான தொழிலதிபர் ஆன கதையை விளக்குகிறார்.

இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1995, ஆகஸ்ட் 21-ல் நான் இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனில் மாலுமியாக பயிற்சிக்குச் சேர்ந்தேன். ஓராண்டு பயிற்சி. 40,000 ரூபாய் உதவித்தொகை அளித்தனர்,” என்கிறார் அவர்.

பாட்னா அருகே உள்ள முசாபர்பூர் அவரது சொந்த ஊர். நல்ல கல்வி கற்ற ஆனால் நடுத்தரக்குடும்பம். சிறுவயதில் இருந்தே பெரிதாக சாதிக்க விரும்பினார். ஆனால் அவரது குடும்பம் நிலையான, வழக்கமான வேலைவாய்ப்புகளையே விரும்பியது.

அவரது சகோதரர் (உயிருடன் இல்லை) ஒரு மருத்துவர். சகோதரி ஐஐடியில் சிவில் எஞ்சினியரிங் படித்தார். புர்னேந்து முசாபர்பூரில் எல்.எஸ். அரசுக் கல்லூரியில் வேதியியல் படித்தார். அந்த கல்லூரியில் அவரது அப்பா பேராசிரியர்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/15-09-17-06cogo2.JPG

சிங்கப்பூரின் ஹெச்என்ஐ 950,000 டாலர்கள் கோகோபோர்ட்டில் முதலீடு செய்துள்ளது

 
நான் ஆறாவது ஏழாவது வகுப்புப் படிக்கையிலேயே தொழில் செய்யவேண்டும் என்று திட்டமிடுவது வழக்கம். ஆனால் என் குடும்பத்தினர் அதற்கு எதிராக இருப்பர். தொழிலதிபராக இருப்பது தவறு என்று அவர்கள் நினைத்தனர்,” என்கிறார் புர்னேந்து.

13 வயதிலிருந்தே புர்னேந்து குடும்பத்தை விட்டு விலகி உலகை அறியவேண்டும் என நினைத்தார். “ நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன். இப்போதும் அப்படியே. நான் ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பினேன்.”

1995-ல் இந்திய கப்பல் கழகத்தின் விளம்பரம் பார்த்தார். மும்பையில் டி.எஸ்.சாணக்கியா கப்பலில் பயிற்சி என்று போட்டிருந்தது. அவர் உடனே விண்ணப்பித்தார். “அதற்கான தேர்வில் வென்றேன். உலகைக் காணவும் அதேவேளையில் என்னை நானே அறிந்துகொள்ளவும் விரும்பினேன்,” என்கிறார் அவர்.

20 வயதில் அவர் மும்பை சென்றார். கையில் பணமே இல்லை. “சிஎஸ்டி ரயில் நிலையம் அருகே ஒரு விடுதியில் ஓரிரவுக்கு 50 ரூ என்ற வாடகையில் தங்கினேன்.  சிஎஸ்டியில் இருந்து நரிமன் பாயிண்டுக்கு நடந்தே செல்வேன். பத்துரூபாய்க்கு எளிமையான சாப்பாடுதான் சாப்பிடுவேன்,” சிரமகாலங்களை நினைவுகூர்கிறார்.

அவர் கடினமாக உழைத்தார். கப்பலிலும் அவருக்கு மரியாதை கிடைத்தது. ஒரு மாலுமியாக அவர் சுமார் 150 நாடுகளைச் சுற்றிவந்துவிட்டார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/15-09-17-06cogo5.JPG

புர்னேந்து சேகர் தன் அலுவலக ஊழியர்களுடன்


ஆண்டுக்கு 12 மாதங்கள் கப்பலில் பயணம் செய்தேன். 2003 வரை வேறெதுவும் யோசிக்காமல் கடுமையாக உழைத்தேன்,” என்கிறார் புர்னேந்து. அதே ஆண்டில் அவரது சகோதரியின் தோழி கீர்த்தியுடன் அவருக்குத் திருமணம் ஆனது.

”எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் என் அப்பா ஐசியுவில் இருந்தார். அவர் என்னை மணக்கோலத்தில் காணவிரும்பினார். எனவே கீர்த்தியை மணந்தேன். 10-15 ஆண்டுகள் கழித்து இப்போது அதன் மதிப்பு தெரிகிறது. என்னை ஏற்றுக்கொள்வது எளிதன்று. ஆனால் என் மனைவி என்னைப் புரிந்துகொண்டார்.” என்கிறார் அவர்.

அவர் திடீரென முடிவுகள் எடுப்பவர். கப்பல் வேலையை விட்டு லாஜிஸ்டிக்ஸில் எம்பிஏ படிக்கும் முடிவையும் திடீரென எடுத்தார். அதுவும் அவரும் மனைவியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தபோது. 

என் மனைவியிடம் இந்த முடிவைச் சொன்னபோது அவர் கோபித்துக்கொண்டார். எனக்கு சேமிப்பு என்று எதுவும் இல்லை. நன்றாக செலவழித்து வாழ்ந்துவிட்டேன். அதனால் இன்னும் ஒரிரண்டு ஆண்டுகள் கப்பல் வேலையைத் தொடர்ந்தால் குடும்பத்துக்கு தேவையான பணத்தைச் சேர்க்கலாம் என்று கருதினேன்.”

அவர் கப்பல் வேலையில் இருந்ததால் சிறந்த தொழில் பள்ளிகளில் சேரும் வாய்ப்பு இல்லை. ஆனாலும் சிங்கப்பூரில் உள்ள எஸ் பி ஜெயின் நிறுவனத்தில் இடம் கிடைத்தது. “எம்பிஏ படிக்க அட்மிஷன் கடிதம் கிடைத்தபோது என் முதல் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து 5 மணி நேரம் கழித்து நான் எம்பிஏ படிக்கச் செல்கிறேன் என்று கூறினேன்!”

ஓராண்டு எம்பிஏ படிக்க அவர் 15 லட்சரூபாய் கல்விக்கடன் வாங்கினார். அவரது  மனைவி இந்தியாவிலேயே இருந்து ஒரு மருந்துநிறுவனத்தில் தகவல் தொடர்புத்துறையில் வேலை பார்த்தார். ஏப்ரல் 2006-ல் அவர் படிக்கத் தொடங்கினார்.

அவர் தன் வகுப்பில் முதலாவதாக வந்தார். அத்துடன் இந்தியா திரும்பியதும் அவர் டாம்கோ என்ற கப்பல் நிறுவனத்தில்  பிராந்திய விற்பனைத் தலைவராக வேலை கிடைத்தது. 2007- 2014 வரை அங்கு வேலை பார்த்து தெற்காசிய வணிகத்துறை இயக்குநராக உயர்ந்து, பின்னர் விலகினார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/15-09-17-06cogo4.JPG

அடுத்த நிதியாண்டின் இறுதியில் புர்னேந்து அமெரிக்க டாலர்கள் 100 மில்லியன் அளவுக்கு வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளார்


 “அந்த நிறுவனத்தில் ஒரு நல்ல விஷயம், கடின உழைப்புக்கு பலன் தருவார்கள். நான் எப்போதும் கடின உழைப்பாளி என்பதால் அது உதவியது,” என்று தன் வளர்ச்சியை புர்னேந்து குறிப்பிடுகிறார்

2014-ல் அவர் பனால்பினா வேர்ல்டு ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அவருக்கு சொந்த தொழில் தொடங்க ஆர்வம் இருந்தது. “என் மனசு வேலையில் லயிக்கவில்லை. மே 2016-ல் நான் வேலையை விட்டேன்.”

அப்போது அவருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. அவரிடம் தன் மனதில் இருந்த யோசனையை செயல்படுத்த தேவையான  பணம் இருந்தது. தன்னுடைய ஓராண்டு சேமிப்பை மனைவியிடம் கொடுத்தார். தன் இரு குழந்தைகளையும் முசாபர்பூருக்கு அழைத்துப்போனார். “நான் தோற்றுவிட்டால் இதுதான் உங்கள் வீடு என்று குழந்தைகளிடம் கூறினேன். நான் உணர்ச்சி வயப்பட்டேன்,” என்கிறார் அவர்.

மும்பையில் கோரிகாவோன் கிழக்கில் ஷகுன் மாலில் ஒரு எட்டுக்கு எட்டு அடி அலுவலகத்தில் கோகோபோர்ட் தொடங்கியது. அவர் மட்டுமே தொடக்க ஊழியர். “முதல்நாள் தனியே உட்கார்ந்தது ஞாபகம் இருக்கிறது. அதுவரை எல்லாம் கனவு போலவும் இப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமலும் இருந்தது,” என நினைவுகூர்கிறார் அவர்.  

அவரிடம் ஆட்கள் இல்லை. பணமும் இல்லை. முந்தைய நிறுவனங்களின் தொடர்புகளைப் பயன்படுத்தவும் அவர் விரும்பவில்லை.

”புதிய ஆட்களை சந்திப்பது நல்லது. புதிய அனுபவம் கிடைக்கும்,” என்கிறார் புர்னேந்து சிரிப்புடன்.

கடைசியில் லாஜிஸ்டிக்ஸ் நிபுணரான அனுராக் டாப்ரால், ஐஐடியில் படித்தவரான குணால் ரத்தோட்,  நிஷாந்த் டால்மியா (அமேசானில் பணிபுரிந்தவர்), ஹர்ஷ் (முன்னாள் வங்கியாளர்) ஆகியோர் அவரது குழுவில் சேர்ந்தனர். 

முதல் ஆறுமாதத்துக்கு நாங்கள் வாடிக்கையாளர்களை மட்டும் சந்தித்துகொண்டிருந்தோம். அனைவரும் இலவசமாகப் பணிபுரிந்தார்கள். குஜராத்தைச் சேர்ந்த முதல் வாடிக்கையாளரை நாங்கள் பெறும்வரை.  இதற்கிடையில் 950000 டாலர்கள் சிங்கப்பூரில் உள்ள ஹெச்என்ஐ நிறுவனத்திடம் இருந்து நான் பெற்றிருந்தேன்.”

கோகோபோர்ட் பெரிய நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை சரியான விலையில் எளிதாக கையாள உதவியது.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/15-09-17-06cogo3.JPG

கோகோபோர்ட் ஒரு எட்டுக்கு எட்டு அடி அலுவலகத்தில் தொடங்கியது


நிறுவனங்கள் கோகோபோர்ட்டில் தங்களை பதிவு செய்வர்.  நாங்கள் அவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கான கட்டணத்தைக் கூறுவோம்.  எல்லா சேவையையும் ஒரே கூரையின் கீழ் தருகிறோம்

சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். தினமும் 10 நிறுவனங்கள் சராசரியாகப் பதிவு செய்கின்றனர்.  ஏழு அலுவலகங்களில் சுமார் 50 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். 2018-ன் இறுதியில் 100 மில்லியன் டாலர்கள் வருவாயை புர்னேந்து எதிர்பார்க்கிறார்.

 “நான் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்துள்ளேன். என் குழுவினரின் கடின உழைப்பு நல்ல வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போதும் நான் கடினமாக உழைக்கிறேன். தூங்குவதே குறைவு,” புர்னேந்து தன் வெற்றி ரகசியத்தைக் கூறுகிறார்.

அவர் வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்துக்கொண்டிருக்கிறார். இதுவரை அவர் சொந்த வீடு வாங்க வில்லை. அது தவறான முதலீடு என்று நினைக்கிறார். அவர் இயல்பாக முடிவுகளை எடுக்கிறார். மாறும் சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார். அவரது வெற்றிக்குக் காரணமே அதுதான்.

அதிகம் படித்தவை

  • Wednesday, February 26, 2020