Milky Mist

Thursday, 18 April 2024

ஐஐஎம் முதல் மதிப்பெண் மாணவரின் ரூ 5 கோடி காய்கறித் தொழில்!

18-Apr-2024 By ஜி சிங்
பாட்னா

Posted 02 Sep 2017

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கௌஷ்லேந்திராவிடம் இருந்தது ஒரு சின்ன அறையும் வெல்லவேண்டும் என்ற கனவும் மட்டும்தான்.

இப்போது கௌசல்யா அறக்கட்டளை என்ற லாபநோக்கம் இல்லாத அவரது அமைப்பு பீஹாரில் உள்ள 20,000 விவசாயிகளுக்கு போட்டி நிறைந்த சந்தையில் இயங்குவதற்கான திறன்களைச் சொல்லித் தருகிறது. அவரது லாபநோக்கில் இயங்கும் இன்னொரு நிறுவனம் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு காய்கறி விற்பனை செய்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09ka1.JPG

ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த கௌஷ்லேந்திரா வகுப்பில் முதலாவதாக வந்தவர். அவர் கௌசல்யா அறக்கட்டளை (லாபநோக்கு அற்றது), நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களை 2008ல் தொடங்கினார்


கௌஷ்லேந்திரா வித்தியாசமானவர். அவர் சாதி, மத வேறுபாடுகளை எதிர்க்கும் முகமாக தன் கடைசிப்பெயரைக் கைவிட்டுவிட்டார். அவர் பெயருக்கு இப்போது பின்னொட்டு இல்லை!

புகழ்பெற்ற அகமதாபாத் ஐஐஎம்மில் படித்தாலும் தன் சகமாணவர்களைப் போல் அவர் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணிபுரியவில்லை. வெளிநாடு செல்லவில்லை!

1981, 14 ஜனவரியில் பீஹாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் முகமதுபூர் கிராமத்தில் பிறந்தவர் இவர். மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டி. பெற்றோர் இருவரும் சாதாரண அரசுப்பணியில் இருந்தனர். 5 ஆம் வகுப்புவரை இந்தி வழியில் அரசுப்பள்ளியில் கற்றார்.

பின்னர் கிராமத்தில் இருந்து 50 கிமீ தள்ளி இருந்த ரேவாரில் உள்ள ஜவஹர் நவதோயா வித்யாலயாவில் அவரது பெற்றோர் சேர்த்தனர். அவரது மாறுதலுக்கு அப்பள்ளியில் விதை போடப்பட்டது.

“நுழைவுத் தேர்வு வைத்துத்தான் அந்த பள்ளியில் சேர்ப்பார்கள். தேர்வானவர்களுக்கு இலவசக்கல்வி. உணவு, தங்குமிடம் ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படும்,” சொல்கிறார் கௌஷ்லேந்திரா.

ஏழையாக இருந்தாலும் திறமை இருந்தால் போதும். சில மாணவர்கள் மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். விடுமுறைகளில் கூட வீட்டுக்குப் போகமாட்டார்கள். ஏனெனில் வீட்டில் உணவு கிடைக்காத அளவுக்கு வறுமை!

“இதைக் கண்டு நான் வருந்தினேன். சமூகம் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை எனத் தோன்றியது,” அவர் சொல்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09kafarm.JPG

பீஹாரில் 20,000 விவசாயிகளுக்கு கௌசல்யா அறக்கட்டளை உதவுகிறது


அந்த பள்ளியில் இருந்து 1996-ல் வெளியே வந்த அவருக்கு  இந்த வேறுபாட்டைக்களையவேண்டும் என்று தோன்றியது.

பாட்னாவில் அறிவியல் கல்லூரியில் மேனிலைப்பள்ளிப் படிப்பு முடித்தபின் கௌஷ்லேந்திரா பிடெக் விவசாயப் பொறியியல் படித்தார். குஜராத்தில் உள்ள ஜுனாகாத்தில் இருந்த இந்தியன் வேளாண்மை ஆராய்ச்சிக் கழக கல்லூரியில் (ஐசிஏஆர்) இதை முடித்தார்.

“ஐஐடியில் சேர விரும்பினேன். ஆனால் நுழைவுத் தேர்வில் வெல்ல முடியவில்லை. ஆனால் என் விதி விவசாயிகளுக்காகப் பாடுபடவேண்டும் என்பதால்தான் நான் ஐசிஏஆர் சென்றேன் என நினைக்கிறேன்.”

நான்கு ஆண்டு  படிப்பின்போது தன் சக குஜராத்தி மாணவர்களின் தொழில்முனையும் ஆர்வம் மற்றும் குஜராத் மாநில வளர்ச்சிகள் கண்டு தூண்டப்பட்டார்.  "என் மாநிலத்தில் சரியான சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. ஆனால் குஜராத்தில் மின் பிரச்னையே கிடையாது. சாலைகளோ மிக அற்புதம்,” அவர் நினைவுகூர்கிறார்.

“மற்றவர்களைப் போல் இல்லாமல் என் குஜராத்தி நண்பர்கள் வேலை தேட முயற்சிக்காமல் தொழிலதிபர்கள் ஆகவிரும்பினர். நானும் அவர்களைப் போல சொந்தமாக ஏதாவது செய்யவிரும்பினேன். குஜராத் போல் என் மாநிலத்தையும் வளமாக்க விரும்பினேன்,” சொல்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09kastudy.JPG

 சொட்டுநீர்ப்பாசனக் கருவிகள் செய்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனம் ஒன்றில் ஆறுமாதம் வேலை பார்த்த கௌஷ்லேந்திரா பின்னர் ஐஐஎம்மில் சேர்ந்தார் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


2003ல் அவர் தங்கப்பதக்கம் பெற்று படிப்பை முடித்தார். சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் செய்த இஸ்ரேல் நிறுவனமான நெட்பார்மில் மாதம் 6000 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தார். ஆந்திராவில் விவசாயிகளைச் சந்தித்து சொட்டுநீர்ப்பாசனம் பற்றிக் கூறுவது அவர் பணி. 

“உழவர்களிடம் பணி நிமித்தம் பேசியதில் அவர்களுக்கு விவசாயம் மூலம் அதிக லாபம் பெற நிறைய கற்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.”

ஆறுமாதத்தில் வேலையை விட்டுவிட்டார். அகமதாபாத்தில் பங்கஜ்குமார் என்ற நண்பரின் வீட்டுக்குப் போனார். அவர் எம்பிஏ நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் எம்பிஏ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.”

2005-ல் தேர்வில் வெற்றிபெற்று அகமதாபாத் ஐஐஎம்மில் சேர்ந்தார். கல்விக்கடனாக வங்கியில் 4 லட்சரூபாய் பெற்றார். தன் வகுப்பில் முதலாம் மாணவராக 2007-ல் தேர்ச்சி பெற்றார். இதற்காக 25000 ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் பாட்னா திரும்பி தன் கனவுகளை நனவாக்கத் திட்டமிட்டார். தனக்குக் கிடைத்த 25000 ரூபாயில்  100 சதுர அடியில் ஒரு அறையை 1,200 ரூபாய் வாடகைக்கு எடுத்தார். மாநிலம் முழுவதும் பயணம் செய்து உழவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09kaoffice.JPG

மனைவி ரேகா குமாரியுடன் கௌஷ்லேந்திரா தன் அலுவலகத்தில்


“உழவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினால் என் மாநிலம் உயரும் என்று நம்பினேன். 9 மாதங்கள் பயணம் செய்து உழவர்களைச் சந்தித்தேன். கிராமங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்னைகளைக் கண்டுணர்ந்தேன்.” இன்னும் அவர்களின் தொழில்கள் முறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவர் உணர்ந்தார்.

ஜனவரி 2008-ல் அவர் இரு நிறுவனங்களை ஆரம்பித்தார் ஒன்று கௌசல்யா அறக்கட்டளை. இது லாப நோக்கம் அற்றது.  நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடட், இது வணிக நோக்கிலானது. இவற்றை வாடகை அறையில் தன் அண்ணன் திரேந்திர குமாருடன் இணைந்து தொடங்கினார். திரேந்திரா ஒரு மருந்துநிறுவனத்தில் வேலைபார்த்தவர்.

“அதிக லாபம் ஈட்டுவதற்கான முறைகள், உரம்  மற்றும் விவசாய முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டேன்,” அவர் விளக்குகிறார். தன் வணிக நோக்கிலான இன்னொரு நிறுவனம் மூலமாக நேரடியாக உழவர்களிடம் இருந்து காய்கறிகள் வாங்கி விற்பனையாளர்களுக்கு விற்றார்.

 “உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதும் தான் எங்கள் இலக்கு. சந்தைப்படுத்தும் சங்கிலியை உருவாக்குவதில் எங்கள் நிறுவனம் கவனம் செலுத்தியது.” காய்கறிகள் சம்ரிதி ஏசி வண்டிகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

குடும்பத்தினரும் நண்பர்களும் கொடுத்த பணத்தில் தொடங்கப்பட்ட கௌசல்யா அறக்கட்டளை 50,000 ரூபாயில் தொடங்கப்பட்டது. மார்ச் 2008-ல் வங்கியிடமிருந்து 50 லட்ச ரூபாய் கடன் வாங்கினார் கௌஷ்லேந்திரா. ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் வுமன்ஸ் வேர்ல்ட் பேங்கிங் என்ற அமைப்பிடமிருந்தும் 5 லட்சரூபாய் கடன்பெற்றார்..

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09kapo.JPG

 2016-17-ல் நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடட் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது


ஆனால் கடுமையான சவால், விவசாயிகளை இவரது யோசனையை ஏற்க வைப்பதில் இருந்தது. “பயிற்சி பெறுவது என்ற யோசனையை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் நல்ல நிறுவனத்தில் வேலைக்குப் போகாமல் வீணடித்தது போதாது என்று அவர்கள் தொழிலையும் வீணடிக்க வந்ததாக நினைத்தனர்.” யாரும் முதலில் ஏற்கவில்லை. ஆனாலும் கடைசியில் கௌஷ்லேந்திரா பயிற்சியைத் தொடங்கினார். வந்தது மூன்றே மூன்று விவசாயிகள்!

”கடன் பெற்ற தொகை மூலம் 30 ஏசி வண்டிகளை வாங்கினோம். நாங்கள் அளிக்கும் பசுமையான, விலை மலிவான காய்கறிகளை விற்கும்படி விற்பனையாளர்களை உருவாக்கினோம் நானும் என் அண்ணாவும்கூட பாட்னா தெருக்களில் காய்கறி விற்றுள்ளோம்,” என்கிறார் அவர்.

ஆரம்பத்தில் சுவாரசியமக இருந்தாலும் விரைவில் நஷ்டத்தை சந்தித்தனர். முதல் ஆண்டில்(2008-9) ஆறு லட்ச ரூபாய் விற்பனை. இதனால் லாபம் இல்லை. 2011-12-ல் இந்த விற்பனை 70 லட்சமாக உயர்ந்தது. பாட்னாவில் வண்டி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. ஆனாலும் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை.

“விற்பனை உயர்ந்தாலும் லாபம் இல்லை. உழவர்களுக்கு நல்ல விலை கொடுத்துவிட்டு குறைந்தவிலையில் விற்றதே காரணம்,” என்கிறார் கௌஷ்லேந்திரா.

2014-ல் வியூகத்தை மாற்றினார். விலைமீது இருந்த கட்டுப்பாட்டை நீக்கினார். செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுத்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/13-07-17-09kagroup.JPG

கௌசல்யா அறக்கட்டளையில் தன் குழுவினருடன்


இப்போது 2016-17-ல் நிறுவனத்தின் விற்பனை ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது.

“கௌசல்யா அறக்கட்டளை தொடர்ந்து உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. எங்களுக்கு தங்களுடைய உற்பத்தியை விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கே விற்கலாம்,” என்கிறார் கௌஷ்லேந்திரா.

“கனவுகளைப் பின் தொடருங்கள். மனம் தளராதீர்கள். உதயசூரியனை எல்லோரும் வணங்குவார்கள்,” இதுவே கௌஷ்லேந்திரா இளைய தலைமுறைக்குத்தரும் ஆலோசனை.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The Success Story of Narayan

    கனவின் வெற்றி

    மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • Former mill worker came close to starting a private airlines

    உயரங்களை எட்டியவர்

    ராஜ்குமார் குப்தாவின் கதை அசாதாரணமானது. ஆலைத் தொழிலாளியாக ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ச்சிபெற்றவர். சின்னதாக ஒரு குடியிருப்பைக் கட்டுவதில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை

  • Man who was booking bus tickets is now owner of a bus company

    வெற்றிப்பயணம்

    ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்

  • toilet business

    புதுமையின் காதலன்!

    அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • Bouquet shop started with Rs 5,000 is now doing Rs 200 crore turnover

    காதல் தந்த வெற்றி

    பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை

  • Winning through finding an opportunity

    குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்

    பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.