சோற்றை மட்டுமல்ல; கரண்டியையும் தின்னலாம்!

அஜுலி துல்ஸயன் Vol 1 Issue 14 ஹைதராபாத் 15-Jul-2017

பழைய பிரச்னைகளுக்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்கள் தொழில்முனைவோர் என்று சொல்வதுண்டு. அது நாராயண பீசாபதியைப் பொருத்தவரை உண்மை. அவர் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விதை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி.

ப்ளாஸ்டிக் கரண்டிகளைப் பார்த்து மனம் நொந்துபோகிறவர்களில் அவரும் ஒருவர். அவற்றால் ஏற்படும் சுற்றுச்சுழல் கேடு, உடல்நலக் கேடு பற்றி அவர் கவலை கொண்டிருந்தார். அதனால் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு மாற்று கண்டறிந்துள்ளார்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/03-06-17-09jun3-17-bust.JPG

நாராயண பீசாபதி, உட்கொள்ளக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் பேகிஸ் பிரைவேட் லிமிடட் , நிறுவனர்(படங்கள்: பி. அணில் குமார் )


அது உலகின் முதல் உட்கொள்ளக்கூடிய கரண்டி. ஆம். கரண்டியையும் தின்றுவிடலாம்.

அரிசி, ஓமம், கோதுமை, சோளம், மிளகு ஆகியவற்றைக் கொண்டு இந்த கரண்டிகள், சாப்ஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உணவுண்ட பிறகு இந்த கரண்டிகளையும் கபளிகரம் செய்துவிடலாம்! அவற்றைத் தூக்கி எறிந்தால் அவை பூச்சிகளால் உண்ணப்படும் அல்லது 5-6 நாட்களில் அழுகிப்போய்விடும்.

2010-ல் நாராயணா, பேகிஸ் புட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் இப்போது அந்நிறுவனத்தை லாபகரமாக மாற்றி உள்ளார் அதன் ஆண்டு விற்பனை ரூ 2 கோடி.

ஆனால் இப்படியொரு பொருளை தயாரிக்க யோசித்ததில் இருந்து விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு இடையில் இருந்த காலம் எளிதாக இருக்கவில்லை.

இது தயாரிக்கும் எந்திரத்துக்காக ரூ 60 லட்சம், தொழிற்சாலை அமைக்க ரூ 3 கோடி, அவர் செலவழித்தார்.

 “ஹைதராபாத்திலும் பரோடாவிலும் இருந்த இரண்டு வீடுகளை விற்றேன். என் சேமிப்பு, நண்பர்களிடம் கடன், வங்கிக்கடன் ஆகியவை  மூலம் முதலீடு திரட்டினேன். இப்போது நான் வசிக்கும் வீடுகூட அடகு வைக்கப்பட்டது,” என்கிறார்.

தின்றுவிடக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் யோசனை அவருக்கு 2006-ல் உருவானது.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/03-06-17-09jun3-17lead1.JPG

அரிசி, ஓமம், கோதுமை, சோளம், மிளகு ஆகியவற்றால் ஆனவை இந்த கரண்டிகள்


“ப்ளாஸ்டிக்கில் விஷமும் புற்றுநோய் உருவாக்கும் பொருட்களும் உண்டு. ப்ளாஸ்டிக்கால் பாலிஸ்டீரின் என்கிற பொருளும் அதன் மூலம் புற்றுநோய் காரணியான ஸ்டைரீனும் உருவாக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன,” என்கிறார் நாராயணா.

“இவ்வளவு அதிகமாக ப்ளாஸ்டிக் கரண்டிகள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் பாக்டீரியா தொற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது என்னை மேலும் அச்சுறுத்தியது,” என கூடுதலாகச் சொல்கிறார் அவர்.

விதை ஆராய்ச்சி மையத்தில் அவர் நிலத்தடி நீர் பற்றி ஆய்வு செய்தார். நீர் அதிகம் தேவைப்படும் நெல்லைப் பயிர்செய்வதால் நிலத்தடி நீர் குறைவதாக அவர் கண்டறிந்தார். அதனால் கிராமப்புறப் பகுதிகளில் சோளமும் கேழ்வரகும் பயிரிடுவது நிலத்தடி நீரை சமன் செய்யும் என்ற கருத்தை அவர் ஆதரிக்கிறார்.

அவர் கள ஆய்வில் இருக்கும்போது சோள ரொட்டியை உண்பார். அந்த ரொட்டி குளிர்ந்தால் மிகவும் கடினமானதாக ஆவதைக் கண்டார்.  அதைக் கரண்டியாகக் கூடப் பயன்படுத்த முடியும். இதிலிருந்தே அவருக்கு உட்கொள்ளக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் யோசனை பிறந்தது.

“காக்ரா எனப்படும் குஜராத்தி உணவுப் பண்டத்தைப் பயன்படுத்தி பிற இனிப்புகளை  உண்பதைப் பார்த்துள்ளேன். இதுவும் எனக்கு உண்ணப்படும் கரண்டிகளை உருவாக்க ஊக்கமளித்தது,” நினைவுகூர்கிறார் அவர்.

2007-ல் அவர் தன் விஞ்ஞானி வேலையைத் துறந்து இந்த கரண்டியைத் தயாரிப்பதில் கவனம் குவித்தார். உலகிலேயே இது முதன்முதலில் செய்யப்படுவது என்பதால் எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து உருவாக்க வேண்டும்.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/03-06-17-09jun3-17-cut.JPG

பேகியின் கரண்டிகள்


இதற்கான எந்திரங்களையும் சிரமப்பட்டு உருவாக்கினார்.

“எங்கள் கரண்டிகள் உணவிலும் தண்ணீரிலும் போட்டால் உடனே கொழகொழ என்று ஆகாது. 10- 15 நிமிடம் வரை தாக்குப் பிடிக்கும். சாப்பாடு முடிந்ததும் கரண்டிகளையும் சாப்பிடும் விதத்தில் உள்ளன,” என்கிறார் 50 வயதாகும் இந்த விஞ்ஞானி.

இந்த பொருளைத் தயாரித்த ஆரம்ப நாட்களில் அவர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இதன் நன்மைகளைப் பற்றி விளக்கினார். ரூ 40க்கு 25 கரண்டிகள். இந்த குறைந்த விலையிலும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. விற்பனையும் இல்லை; தேவையும் இல்லை. அவருக்கு பலமுறை போதும் என்று தோன்றி இருக்கிறது.

“ஒரு நாள் வீட்டுக்கு ஏழெட்டுப்பேர் கடுமையான முகத்துடன் வந்தனர் அவர்கள் வங்கியில் இருந்து வருவதாகவும் பத்து நாளில் என் வீட்டைக் காலி செய்யவேண்டும் என்றும் கூறினர். அவர்களுக்குச் சொல்ல என்னிடம் பதில் இல்லை. நான் என் கண்டுபிடிப்பைப் பற்றி அவர்களிடம் கூறினேன். என் சிரமம், உழைப்பு அதனால் ஏற்பட்ட கடன் என்று விளக்கினேன். கடுமையான முகங்கள் மென்மை ஆயின. அவர்கள் போகும்போது 2000 ரூபாய்க்கு என் கரண்டிகளை வாங்கிக்கொண்டு சென்றார்கள்!”

அவரது கரண்டிகள் பற்றி ஊடகங்களில் செய்தி வந்தபின்னர் மெல்ல நிலைமை  மாறி, விற்பனை சூடு பிடித்தது.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/03-06-17-09jun3-17ver.JPG

ஆண்டு விற்பனை கடந்த ஆண்டில் இருந்து அதிகரித்து 2 கோடி ரூபாய் ஆனது.


“என் கைபேசி ஓயாமல் ஒலித்தது. என் மின்னஞ்சல் நிரம்பியது. மார்ச் 2016ல் 16-18000 மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இன்று  மட்டும் சர்வதேச அளவில் 80,000 மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

 “நிதி உதவி செய்யும் பங்குதாரர்களும் வந்தார்கள். ஒரே மாதத்தில் 3, 85000 அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்தது. எங்கள் இணைய தளத்தில் 30 – 32,000 ஆர்டர்கள் வந்தன.

“நான் ஒதுங்கலாமா என்று யோசித்தபோதுதான் வாய்ப்புகள் குவிந்தன. வெற்றி அடைந்தேன்,” புன்னகையுடன் கூறுகிறார் அவர்.

ஆர்டர்களை சமாளிப்பது சிரமம் ஆகிவிட்டது. “கேட்ட சமயத்தில் கொடுப்பதும் தேவையை சமாளிப்பதும் இப்போதைய சவால். எங்கள் எந்திரத்தை பகுதி – தானியங்கியிலிருந்து முழுவதும் தானியங்கியாக மாற்றி உள்ளோம்,” அவர் கூறுகிறார்.

உற்பத்தி மற்றும் சிப்பம் கட்டும் பணிக்கு 12 பேர் வேலை செய்கிறார்கள். ஹைதராபாத் எல்பி நகரில் இருந்த அவர்களது நிலையத்தில் தினமும் 5,000 கரண்டிகள் தயாரித்தனர். இப்போது 30,000 கரண்டிகள் தயார் ஆகின்றன!

இன்னும் நவீனமான எந்திரம் உருவாக்க நாராயணா முயற்சி செய்கிறார். தினமும் 1.5 லட்சம் கரண்டிகள் செய்வது இலக்கு.

மசாலா கரண்டி, இனிப்புக் கரண்டி, சாதாரண கரண்டி என மூன்று வகைகள் தயாரிக்கிறார்கள். 100 கரண்டிகள் விலை ரூ 300.

http://www.tamil.theweekendleader.com/backend/web/article/images/03-06-17-09jun3-17-out.JPG

கேஃப் காபி டேவுடன் நாராயணா ஒப்பந்தம் போட்டுள்ளார். வேறு உணவகங்களுடன் இணைய உள்ளார்


ஹைதராபாத்தில் உள்ள கமினேனி மருத்துவமனை, கேஃப் காபி டே, போன்றவற்றுடன் அவர் இணைந்துள்ளார். சென்னை, மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனும் அவர் பேசி வருகிறார்.

பேரடைஸ் பிரியாணி(ஹைதராபாத்), ஆசிப் பிரியாணி (சென்னை) போன்றவற்றுடனும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்ய திட்டம் உள்ளது. இணைய தளம் மூலம் நேரடியாக விற்பதுடன் கண்காட்சிகள், ஆர்கானிக் சந்தைகளிலும் கடைகள் போடுகிறார்.

நாராயணாவின் மனைவி பிரக்னியா பீசாபதியும் பேகி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். “2106-ல் வெற்றிகிடைக்கும் வரை பத்து ஆண்டுகள் இலக்கை நோக்கி ஓய்வின்றி உழைத்தேன். என் துணைவியார் தொடர்ந்து என்னை ஆதரித்தார்,” என தன் வெற்றிக்கதையை சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார் நாராயணா. இவரது மகள் கனடாவில் கணிதத்தில் முதுகலை படித்து வருகிறார்.

அதிகம் படித்தவை

  • Tuesday, April 07, 2020