தி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்!

பி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 1 சென்னை 13-Apr-2017

நம்பிக்கையூட்டும் கதைகளை  பகிர்ந்துகொள்வதற்காக 2010-ல் தி வீக்கெண்ட் லீடர் இணைய தளத்தை ஆங்கிலத்தில் ஆரம்பித்தோம்.

வெற்றிகள், சாதனைகள் இவைதான் இந்த தளத்தின் மையக்கரு. வாசகர்களை சாதிக்கத்தூண்டுதலும், கனவுகளை நனவாக்க முயற்சி செய்யவைப்பதுமே எங்கள் தலையாய நோக்கம்.

வெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை! கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை (படம்: freeimages.com/ Andi O)


இன்னும் இந்த உலகில் நம்பிக்கை அற்றுப்போய்விடவில்லை. நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சமூகப்பணிகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் மூலம் ஈரத்தை இதயங்களில் விதைப்பது எமது இன்னொரு பணி.

பொறியாளர் ஆவதற்கும் மருத்துவர் ஆவதற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கும் ஓடிக்கொண்டிருக்கும் இளைய சமூதாயத்திடம் இதெல்லாம் ஆகமுடியாவிட்டாலும் கலங்காதே! உனக்கு முன்னால் இன்னொரு கதவு திறந்திருக்கிறது. நீ தொழிலதிபர் ஆகலாம்! இதை வலியுறுத்துவதற்காகவே மிகச்சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய உயரங்களை எட்டிய தொழிலதிபர்களின் உணர்ச்சிமிகு வெற்றிக்கதைகளை, அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி சேகரித்து, வெளியிடுகிறோம்.

இங்கே அரசியல் கட்டுரைகளும் இடம் பெறும்.  அவை ஆக்கபூர்வமாக, வளர்ச்சிக்கு உதவக்கூடிய விவாதங்களாக இருக்கும். அரசின் கொள்கைகளை அலசக்கூடியவையாக இருக்கும்.

சூழல், இயற்கை, வனவிலங்குகள் ஆகியவற்றைக் காக்கப் போராடும் சமூகப்போராளிகளைப் பற்றியும் விடாப்பிடியாக எழுதிக்கொண்டே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு அறிமுகம் செய்விப்பது எதிர்கால சமூகத்துக்கு மிக முக்கியத்தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். சுற்றுலா, புத்தாக்க முயற்சிகள், சுயமுன்னேற்ற கட்டுரைகள் ஆகியவையும் இங்கே இடம் பெறுகின்றன!

வெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை! கடின உழைப்பு, மன உறுதி, இவையிரண்டும்தான் வெற்றிக்கு இட்டுச் செல்பவை.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 

தாழாது உஞற்று பவர் -என்பதும் நம் ஆசான் வள்ளுவர் வாக்கே.

தி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில். அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்காமல், தெளிவான கள ஆய்வும் நேர்காணல்களும் செய்து நேர்மையும் அனுபவமும் கொண்ட  பத்திரிகையாளர்கள் எமக்காக இந்தியா முழுவதும் இருந்து, பிரத்யேகமாக அலைந்து திரிந்து எழுதியிருக்கும் கட்டுரைகள் இடம்பெறும் தளம் இது. கட்டுரைகளை வாசிக்கும்போதே அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் தி விக்கெண்ட் லீடருக்கு வந்தால் புத்துணர்ச்சி அடைந்து உத்வேகத்துடன் செயலாற்றத்தொடங்குவீர்கள்!

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து என்றார் வள்ளுவர். ஆமாம். தடை வருகின்ற போதெல்லாம் உத்வேகத்துடன் மேலும் அதிக வலுவுடன் செயல்படத் தேவையான ஊக்கத்தை நாங்கள் இங்கே வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.

ஆக்கம் ஊக்கம் முன்னேற்றம் - இந்த மூன்று சொற்களுமே எங்கள் இணைய தளத்தின் தாரக மந்திரம்.

எங்கள் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்! கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!

உங்கள் அன்புள்ள,

பி சி வினோஜ் குமார்
ஆசிரியர்
தி வீக்கெண்ட் லீடர்

அதிகம் படித்தவை

  • Tuesday, April 07, 2020